தேடப்பட்ட ரவுடி விகாஸ் துபேயை மடக்கிப் பிடித்த ம.பி போலீஸ்: மஹாகாலபைரவர் கோயிலில் நுழைய முற்பட்ட போது கைது!

உ.பி.யின் முக்கிய ரவுடி விகாஸ் துபே மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இங்குள்ள உஜ்ஜைன் நகரின் பிரபல மஹாகாலபைரவர் கோயிலுக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியரான ஆஷிஷ் சிங் கூறும்போது, ‘இன்று காலை உபி போலீஸாரால் தேடப்பட்டு வந்த விகாஸ் துபே மஹாகாலபைரவர் கோயிலுக்கு வந்தார். அங்கிருந்த கோயிலின் காவலர்கள் அவரை அடையாளம் கண்டு போலீசுக்கு தகவல் அளித்தனர். பிறகு வந்த போலீஸாரிடம் தனது அடையாளத்தை உறுதி செய்த துபே கைது செய்யப்பட்டார்.’ எனத் தெரிவித்துள்ளார்.

கான்பூரின் பிக்ரு கிராமத்தில் தன்னை பிடிக்க வந்த போலீஸாரில் 8 பேரை விகாஸ் துபே சுட்டுக் கொன்றிருந்தார். அதன் பிறகு ஜூன் 3 ஆம் தேதி விடியல் முதல் கான்பூரில் இருந்து தப்பிய விகாஸ் துபே உபி போலீஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்.

கான்பூரில் இருந்து தப்பிய துபே, நேற்று முன்தினம் டெல்லியை ஒட்டியுள்ள ஹரியானா எல்லையின் ஒரு சாதாரண விடுதியில் தங்கியதாகக் கண்டறியப்பட்டார். அங்கு போலீஸார் வருவதற்குள் அங்கிருந்து விகாஸ் தப்பி விட்டார்.

இதையடுத்து, மபி மாநிலம் உஜ்ஜைன் நகர் வந்திருந்தவர் அங்கு பிரபல பழம்பெரும் மஹாகாலபைரவன் கோயிலுக்கு செல்ல முயன்றார். இதற்காக வெளியில் பூஜை பொருட்கள் வாங்கியவரை கடைக்காரர் அடையாளம் கண்டதாகக் கருதப்படுகிறது.

இந்த தகவல் கோயிலின் காவலர்களுக்கும், உஜ்ஜைன் போலீஸுக்கும் தெரிவித்து எச்சரிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கோயிலின் உள்ளே நுழைய முயன்ற விகாஸை அதன் காவலர்கள் மறித்து விசாரித்துள்ளனர்.

அவர்களிடம் விகாஸ் ஒரு போலி அடையாள அட்டை காண்பித்துள்ளார். இதன் மீது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதற்குள் அங்கு போலீஸ் வந்து விகாஸை சுற்றி வளைத்தனர்.

இன்று காலை உஜ்ஜைன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள விகாஸ் துபேவை ‘டிரான்ஸிட் ரிமாண்ட்’ செய்து கொண்டு வர கான்பூர் போலீஸ் மபி மாநிலம் விரைந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here