ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தமிழகம் முழுவதும் தடை: அரசாணை வெளியீடு

சாத்தான்குளம் விவகாரத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆட்கள் போலீஸாருடன் சேர்ந்து தந்தை மகனை தாக்கியதாக எழுந்த புகாரினால் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தடை செய்யும் கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காவல் பணியில் போலீஸாருக்கு உதவியாக, சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, ஊர்க்காவல் படை, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆகியோரை பயன்படுத்துவது வழக்கம். முதல் மூன்றும் காவல்துறையுடன் சம்பந்தப்பட்டவை. ஆனால் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அனுமதியின்றி போலீஸுக்கு உதவியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தை உலுக்கிய தூத்துக்குடி சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் லாக்கப் மரண வழக்கில் அவர்களை போலீஸாருடன் தாக்கியதாக ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது புகார் எழுந்தது. மேலும் மனித உரிமை ஆணையத்துக்கு அளிக்கப்பட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

போலீஸ் அதிகாரத்தை கையில் எடுத்து பொதுமக்களை தாக்குவதாக மாநிலம் முழுவதும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீதான புகார்கள் வந்ததை அடுத்து பல மாவட்டங்களில் தடை செய்யப்பட்டது. சென்னையில் தடை இல்லை என காவல் ஆணையர் அறிவித்திருந்தார்.

தடையை வாய்மொழியாக சொன்னால் போதாது அரசாணையாக வெளியிட வேண்டும் என கி.வீரமணி கோரிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் இன்று ஃபிரண்டஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு மாநிலம் முழுவதும் இருந்த அனுமதியை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here