குருவிச்சை இருந்தால் அதை மட்டும் வெட்டி விடுங்கள்; மரத்தை வெட்டாதீர்கள்: சரவணபவன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை 7 ஆசனத்தை யாழ்ப்பாணத்தில் கைப்பற்றும். மரத்தில் குருவிச்சை இருந்தால், குருவிச்சையை மட்டும் வெட்டி விடுங்கள். மரத்தையே வெட்டி விடாதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளார் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரும், உதயன் பத்திரிகை உரிமையாளருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இன்று (8) யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஊடக மையத்தில் இருந்துதான் மூத்த போராளி பசீர்காக்கா பேட்டியளித்தார். அதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் எல்லா பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளியிட்டன உதயன் மட்டும்தான் வெளியிட்டது என்றல்ல.

ஊடக சுதந்திரம், கருத்து சுதந்திரத்தில் சட்டத்திற்குட்பட்டு சரியாக செயற்பட்டால் யாருக்கும் பயமின்றி செயற்படலாம். 36 வருட எனது பத்திரிகை வரலாற்றில், செய்திகளை வெளியிடுவது பற்றி ஆசிரியர் பீடம் என்னுடன் கலந்துரையாடியதில்லை. நானும் அதில் தலையிட்டதில்லை. இந்த இடத்தில் அதை முக்கியத்துவப்படுத்தியவரிடம்தான் கேட்க வேண்டும்.

ஊடக மையத்தில் பேசிய ஒன்று எல்லா பத்திரிகைகளிலும் வரும். அப்படித்தான் உதயனிலும் வந்தது. நல்லது மட்டும் வந்தால் ஏற்றுக்கொள்வதும், விமர்சனம் வந்தால் அதைப்பற்றி காரணம் கற்பிப்பதும் முதிர்ச்சியனதல்ல.

செய்தி தவறானதென்றால், அதை அணுக பல வழிகளுண்டு.

நிதி நிறுவனமொன்றுடன் என்னை தொடர்புபடுத்த டக்ளஸ் தேவானந்தா முன்னர் சொன்னதை இப்பொழுது சிலர் காவித் திரிக்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தா அதைப்பற்றி சொன்னபோது, படித்தவர்கள் பேசினால் அதைப்பற்றி விளக்கமளிக்கலாமென பேசாமல் இருந்து விட்டேன்.

இப்பொழுது சில தவ்வல்கள் அதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதன் உண்மைத்தன்மை தெரிய வேண்டுமெனில் உரிய நிறுவனங்களை தொடர்பு கொண்டு தகவலறியலாம். அரசியல்வாதியாக இருப்பதால் இப்படியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகிறது.

நாம் மக்களால் தெரிவானவர்கள். நடந்த சம்பவங்கள் பற்றி மக்களிடம் சொல்லும்போது மிக அவதானமாக இருக்க வேண்டும். ஒரு விடயத்தை சொல்லிவிட்டு, பிறகு அதற்கு விளக்கமளிக்க முயல்வதும் ஆரோக்கியமானதல்ல.

நாம் ஆயுதமேந்தியது, எமக்கெதிரான வன்முறைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவே. நாம் ஓரளவு வெற்றியடைந்தோம் என்றால், அது ஆயுதப் போராட்ட காலத்திலேயே.

இந்த போராட்டத்தில் பல பேர் தம்மை அர்ப்பணித்துள்ளார். இந்த அர்ப்பணிப்பிற்கு நாம் இன்னும் அர்த்தம் கற்பிக்க வேண்டுமே தவிர, அதை அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதல்ல. இன்ற ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அரங்கில் எமது பிரச்சனை பேசப்படுகிறதென்றால், அதற்கு ஒரே காரணம் ஆயுதப் போராட்டமே.

மக்களிடம் கருத்து சொல்லும்போது நாம் முதிர்ச்சியாக கருத்து சொல்ல வேண்டும்.

கரும்புலிகள் தினத்தில் அஞ்சலி செலுத்துவதை தடை செய்ய முயற்சிப்பது, புலி நீக்க அரசியலை செய்வதற்காகத்தான்.

யாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே கைப்பற்றும். உள்ளுக்குள் சில உரசல்கள் நடந்தாலும், இலக்கில் நாம் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். ஐ.தே.கவின் இருந்த வாக்குகள் இரண்டாக பிரியும். சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் அதிகம் செலவழித்துக் கொண்டிருக்கிறார். அவர்களின் வாக்கை சுதந்திரக்கட்சி, டக்ளஸ், வாசுதேவவின் கட்சி ஆகியன பங்கிட வேண்டும். விக்னேஸ்வரனின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதால், அங்குதான் சிறிய உடைவு வரும். அது பெரிய பாதகமல்ல.

வீட்டுக்கு வாக்கிடுபவர்களின் மனநிலை மாறாது. இம்முறை 7 ஆசனத்தையும் நாம் கைப்பற்றுவோம் என்பது என் கணிப்பு.

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலி நீக்க அரசியல் செய்யவில்லை. சில நடைமுறைகள் அப்படியொரு எண்ணத்தை கொண்டு வந்து விட்டது. எல்லோருமல்ல. அது ஒருவர். ஒரு மரத்தில் குருவிச்சை இருந்தால், குருவிச்சையை மட்டும் வெட்டிவிடுங்கள். மரத்தை வெட்டக்கூடாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here