தமிழர்களிற்கு அரசியல் பிரச்சினையொன்றும் கிடையாது; இருப்பது பொருளாதார பிரச்சினை: கோட்டாவின் சகா கொழுப்பு பேச்சு!

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிற்கு அரசியலமைப்பு சார்ந்த பிரச்சனைகள் இல்லை. அவர்களிற்கு உள்ளது பொருளாதார பிரச்சனைகளே. அதிகார பகிர்வு, சமஷ்டி ஆகிய விடயங்களை குறிப்பிட்டு கொண்டு, தமிழ் அரசியல்வதிகள் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள். அவர்கள் மக்களிற்கு தேவையான விடயங்களில் தமது பலத்தை பிரயோகிக்காமல், தேவையற்ற விடயங்களிலேயே தலையிடுகிறார்கள் என சாடியுள்ளார் பெரமுனவின் உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு காரியாலயத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவில்லாமல் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பது அவறான கருத்து என்பதை ஜனாதிபதி தேர்தலில் நிரூபித்துள்ளோம். ஒரு கட்சி பாராளுமன்றத்தில் தனித்து பெரும்பான்மை பலத்தை பெற முடியாது என்ற கருத்தையும் இம்முறை மாற்றியமைப்போம்.

வடக்கு கிழக்கு மக்களிற்கு அரசியலமைப்பு சார்ந்த பிரச்சனைகள் இல்லை. அபிவிருத்தி சார்ந்த பிரச்சனைகளே உள்ளன. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கில் துரித அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தக்கால கட்டத்தில் அப்போதைய அரசாங்கத்திற்கு வடக்கு, கிழக்கில் அரசியல்ரீதியான ஆதரவு பெரும்பாலும் கிடையாது. அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மாறாக மக்களின் அடிப்படை பிரச்சனைகளிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் ஆதிக்கம் கொண்டவர்களாக விளங்கினார்கள். நிறைவேறாது, முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, அதிகாரப்பகிர்வு, சமஷ்டி என குறிப்பிட்டுக் கொண்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தினார்கள்.

இதனால் தமிழ் மக்களே பொருளாதார ரீதியில் பெரும் பிரச்சனையை சந்தித்தார்கள். வடக்கு, கிழக்கில் கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் துரித அபிவிருத்தி இடம்பெறும்.

விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் மாறுபட்ட கருத்துக்களை தோற்றுவித்துள்ளது. வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் தேவையற்ற விடயங்களிற்கே தமது அரசியல் பலத்தை பிரயோகிக்கிறார்கள்.

கடந்த தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்த நபர்கள் என்ற வகையில் நாட்டிற்கு பல நல்ல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நாம் முயற்சித்தோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனால் அப்போதைய பிரதமரும் அவரது அணியுமே அரசாங்கத்தை குழப்பம் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

குறிப்பாக மத்திய வங்கி ஊழல் விவகாரத்தில், அப்போதைய ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நீக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முயற்சித்த போதிலும் ரணில் விக்கிரமசிங்கவும், ரவி கருணாநாயகவும் அதற்கு தடையாக செயற்பட்டனர். ஆளுனரை நீக்க வேண்டும் என பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அதனை ஐக்கிய தேசிய கட்சி கவனத்தில் கொள்ளவில்லை. பல நெருக்கடிகளை கொடுத்த வேளையில் பிரதமர் ராணில் விக்கிரமசிங்கவும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் வெளிநாடு சென்றுவிட்டனர். பின்னர் நானே அர்ஜுன மகேந்திரனை நீக்கும் கடிதத்தை தயாரித்து அதனை உரிய தரப்பிடம் கொண்டு சேர்த்து நடவடிக்கை எடுத்தேன்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பல நல்ல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வாய்ப்புகள் அமைந்தது. ஆனால் அதனை முன்னெடுக்க முடியாது தடைப்பட அரசாங்கத்தில் ஒரு தரப்பினர் மோசமாக செயற்பட்டதே காரணமாகும். நல்லாட்சி அரசாங்கம் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படவும் அதுவே காரணமாக அமைந்துவிட்டது. எவ்வாறு இருப்பினும் இன்று மீண்டும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் தனி அரசாங்கம் ஒன்றினை உருவாக்க முடிந்துள்ளது. இந்த தேர்தலில் எம்மால் வெற்றிபெற முடியும். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாம் வெற்றிபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக மக்கள் பிரதான எதிர்க்கட்சியை நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். எனவே சகல தரப்பினரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட வேண்டாம், நாம் எந்த தரப்பையும் நிராகரிக்கவில்லை. இந்த நாட்டை நேசிக்கும் சகல தரப்பினருடம் நாம் இணைந்து செயற்பட விரும்புகின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் இனவாதம் மதவாதம் பேசும் சிலர் உள்ளனர், ஆனால் அவர்களின் கருத்துக்களை ஜனாதிபதியோ, பிரதமரோ கேட்கப் போவதில்லை. அவர்கள் இந்த நாட்டினை நேசிக்கும் நபர்களை விரும்புகின்றனர். அதேபோல் நாடாக நாம் முன்னேற வேண்டும் என்பதை விரும்புகின்றனர்.

ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் கொள்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் கூட்டணி அமைக்க முடியாது. அவர்களின் கொள்கைக்கு அமைய அவர்கள் எதிர்கட்சியாக இருக்கவே விரும்புகின்றனர். அதற்கு பல காரணிகள் உள்ளன. எவ்வாறு இருப்பினும் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றவுடன் நாட்டில் பல மாற்றங்கள் நிகழும், அது மூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழலில் உருவாகிக்கொடுக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here