மஹிந்தவுடன் இணையும்படி புலிகளே என்னிடம் சொன்னார்கள்: கனகர் புதுக்குண்டு!

“முள்ளிவாய்க்கால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில், ‘இனி போராட்டம் சரிவராது, இந்த அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கான உதவியையும் அபிவிருத்திகளையும் செய்யுங்கள்’ என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் என்னிடம் சொன்னார்கள். அதனால்தான், நான் அரசாங்கத்துடன் இணைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ச.கனகரத்தினம்.

அந்த ஒரு சொல், தனது அடி நெஞ்சில் இப்பொழுது வரை ஆழமாக இருக்கின்றதெனவும் கூறினார்.

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில், நேற்று (06) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் தலைவர்களின் சொல்லை மனதில் வைத்துத்தான் அரசுடன் இணைந்ததாகவும் அந்தக் காலத்தில் மஹிந்த ராஜபக்‌ஷவின் இணைப்பாளராகப் பணிபுரிந்ததாகவும் கூறினார்.

அன்றைய காலகட்டத்தில், சிலருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனதெனத் தெரிவித்த அவர், சிலர் தங்கள் மக்களுக்கான வேலைவாய்ப்பைக் குறைத்து, அவர்கள் சார்ந்த இனத்தவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார்களெனவும் இதனால் தங்கள் மக்களுக்கான வேலைவாய்ப்பு குறைக்கப்பட்டதெனவும் கூறினார்.

வன்னி மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும் அவர் அரசாங்கத்துடன் இருக்கும் தமிழராக இருக்க வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கமெனவும் கனகரத்தினம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here