ஈரான் அணுஆலை தீ விபத்தின் பின்னணியில் இஸ்ரேல்?

ஈரானின் அணு ஆயுத ஆலையில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் மீது ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கி கொள்ளவும் இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப் பட்டது. எனினும் அந்த நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்து கொள்ளலாம், எந்த அளவுக்கு அதை செறிவூட்ட லாம் என்ற வரம்பு விதிக்கப் பட்டது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது கையெழுத்தான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி வந்த ஜனாதிபதி ட்ரம்ப், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.

அதுமட்டும் இன்றி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும் ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார்.

அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. அதன்படி தடை விதிக்கப்பட்ட போர்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங் கியது.

மேலும் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலையை ஈரான் அரசு கட்டி வருகிறது. ஈரான் இந்தப் புதிய ஆலையை கட்டுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் நாதன்ஸ் நகரில் கட்டப்பட்டு வரும் அணு ஆலையில் கடந்த வியாழக்கிழமை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

எனினும் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

அதே சமயம் ஆலையில் புதிதாக நிறுவப்பட்டிருந்த விலை உயர்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி சாதனங்கள் பல தீயில் கருகி நாசமானது.

இந்த விபத்து குறித்து ஈரான் அணுசக்தி அமைப்பின் செய்தி தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வாண்டி நேற்று பத்திரிகையாளர் களிடம் கூறுகையில் “இந்த தீ விபத்து ஈரானின் செறிவூட்டல் பணிகளுக்கு தடையாக இருக்கவில்லை. எனினும் இது நடுத்தர காலத்தில் மேம்பட்ட எந்திரங்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை மந்தமாக்கும். ஆனாலும் இந்த மந்த நிலையை எங்கள் சகாக்களின் விடாமுயற்சி மூலம் ஈடு செய்வோம்“ எனக் கூறினார்.

இந்த நிலையில் நாதன்ஸ் அணு ஆயுத ஆலையில் நடந்தது விபத்து அல்ல என்றும் இஸ்ரேலால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் என்றும் ஈரானின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் உளவு அமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தனியார் பத்திரிகைக்கு அளித்த ஒன்று பேட்டியின் போது இது குறித்து கூறுகையில் “நாதன்ஸ் அணு ஆயுத ஆலையில் நிகழ்ந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் அரசே காரணம். உளவாளிகள் மூலம் ஆலையில் கன்னி வெடிகளை புதைத்து வைத்து இந்த சம்பவத்தை இஸ்ரேல் செய்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன“ எனக் கூறினார்.

ஆனால் ஈரானின் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரானில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இஸ்ரேல் காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என நாட்டின் ராணுவ மந்திரி பென்னி கான்ட்ஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here