வேட்பாளர்களும், கட்சிகளும் விதிமீறாவிட்டால் அமைதியான தேர்தல்!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறாது செயற்படுமிடத்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் என யாழ்ப்பான மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் யாழ் மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் சட்டங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றி நாங்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியின் அதிகாரமளிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தி இருந்தோம்.

அதனடிப்படையில் எவ்வாறு தங்களுடைய தேர்தல் பிரச்சார அலுவலகங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் அது எந்தக் காலப் பகுதிக்குள் அது அமைக்கப்பட வேண்டும் எந்த காலப்பகுதியில் அகற்றப்பட வேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதேபோல covid-19 கொரோனா தொற்று நிலைமை இருக்கும் பொழுது எவ்வாறான சுகாதார நடைமுறைகளினை தங்களுடைய அலுவலகங்களிலும் அத்தோடு வாக்காளர்களை அணுகும் போதும் பின்பற்ற வேண்டியவிதம். அதே போல பிரச்சார நடவடிக்கைகள் கூட்டங்களின் போதும் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய விளக்கமான அறிவுரைகளை வழங்கி இருக்கிறோம்.

பொதுக் கூட்டங்களுக்கான மட்டுப்பாடு எந்த இடங்களில் எவ்வாறான கூட்டங்களை நடத்த முடியும் போன்ற விளக்கங்களையும் கொடுத்திருக்கின்றோம் அதேபோல் கோவில்கள் வழிபாட்டு தலங்களை தவித்துவேறு இடங்களில் அவர்களுடைய கூட்டங்களை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எமக்கு தெரிவித்திருந்தார்கள் அதாவது ஒரு பொதுவான அபிப்பிராயமாக ராணுவத்தினருடைய பிரசன்னம், இராணுவ புலனாய்வுத் துறையினருடைய விசாரணைகள் போன்றவை தங்களை பாதிப்பதாகவும் அது மக்களையும் பாதிப்பதாகவும் தேர்தல் நடவடிக்கைகளை மிகவும் பாதிப்பதாகவும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒருமித்து தெரிவித்திருந்தார்கள்.

எனவே இது குறித்து உரிய இடங்களில் அவற்றை தெரியப்படுத்தி அதற்குரிய தீர்வை பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறோம்.

இந்த விடயங்களை உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்து அதனூடாக அதற்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அறிவித்து இருக்கின்றோம்.

தேர்தல் கடமைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பொலீஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அதற்கான நடவடிக்கைகள் அதற்கென நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

ஆகவே போலீஸார் முழு நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள் இருந்தபோதிலும் நிலைமைகளை அனுசரித்து சில சந்தர்ப்பங்களில் மேலதிக பாதுகாப்பு கருதி போலீசார் இராணுவத்தின் உதவியை கோரினால் மட்டுமே இராணுவத்தினர் குறித்தபடி எங்களில் தலையிடுவார்கள்.

எனினும் இந்த விடயத்தை இங்கே போட்டியிட கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கும்போது ராணுவத்தின் அழைப்பதாக இருந்தால் அந்த அழைப்பு தேர்தல் ஆணைக்குழு ஊடாக செயற்படுத்தப்பட வேண்டும் என்று கூறி இருக்கின்றார்கள் இது தொடர்பில் ஆணைக் குழுவுக்கு தெரியபடுத்த உள்ளோம்.

இதைத்தவிர சில விதிமுறைகள் பற்றியும் தெரிவிக்கப்படுகிறது குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை 61முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன அவற்றில் ஒரு வன்முறை சம்பவம் உட்படஏனையவை தேர்தல் விதிமுறை மீறலான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.

அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் உரிய தரப்பினருக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதைத் தவிர தேர்தல் விதிமுறைகளை மீறாது வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் செயற்பட வேண்டும் எனவும் நாங்கள் கூறியிருந்தோம் அந்த நிலை ஏற்படும் போது தேர்தலை மிகவும் சுயாதீனமாகவும் ஜனநாயகமாகவும் நடாத்த முடியும்.

தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்வதற்காக இரண்டு உள்ளூர் நிறுவனங்கள் செயல்பட உள்ளன “தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் அமைப்பு “மற்றும் “பெப்ரல்” அமைப்பிற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவே அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளினை சுயாதீனமான முறையில் கண்காணிக்க வுள்ளார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தின் தொலைபேசி இலக்கங்கம் 0213207296 தொலைநகல்0212222628
Viber 0766456087 இந்த இலக்கங்களை தொடர்பு கொண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்களை தெரியப்படுத்த முடியும் எனவும் யாழ் மாவட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here