கைதான பொலிசாரிடமிருந்து பாதாள உலக குழுவிற்கு துப்பாக்கிகள் சென்றன!

போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில், மேலும் பல அதிர்ச்சித் தகவல்களை சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. அதன்படி, போதைப் பொருள் கடத்தல்காரர்கள், வழங்கியதாக கூறப்படும் 5 நவீன ரக துப்பாக்கிகளில் நான்கு, பாதாள உலகத்தர்வர்களுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவின், குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ள உத்தியோகத்தர்கள் கையளித்துள்ளதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் தகவல்கள் தெரிவித்தன.

படோவிட்ட பகுதியில் வைத்து, ரஜித்த அல்லது லொக்கு என அறியப்படும் பாதாள உலக உறுப்பினரிடம் இந்த ஆயுதங்கள் கையளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் வழங்கியுள்ள 5 நவீன கைத்துப்பாக்கிகளில் ஒன்று, கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்பட்ட பொலிஸ் குழுவின் பிரதானியாக செயற்பட்டதாக கூறப்படும் தற்போது கைது செய்ய தேடப்பட்டு வரும் பொலிஸ் பரிசோதகர் உடன் வைத்திருந்த நிலையில், அது வெலிவேரிய பகுதியில் வைத்து மீட்கப்பட்டது. இதனையடுத்து சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளிலேயே ஏனைய 4 துப்பாக்கிகளும் இவ்வாறு பாதாள உலக குழுவினரின் கைகளுக்கு சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நான்காம் மாடி தகவல்கள் தெரிவித்தன.

‘கடந்த மே 25 ஆம் திகதி பலபிட்டி கடலில் வைத்து 243 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது கடற்படையின் உதவியும் பெறப்பட்டுள்ளது. அந்த போதைப் பொருள் இருந்த படகில் 5 நவீன துப்பாக்கிகளும் இருந்தன. இதில் 5 ஆயுதங்களையும், 43 கிலோ ஹெரோயினையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கடத்தல் காரர்களுடன் தொடர்பில் உள்ள குழு தனியாக எடுத்து வைத்துள்ளனர். அந்த போதைப் பொருள் தற்போது மரண தண்டனை கைதியாக, பூசா சிறையில் உள்ள வெலே சுதா எனும் போதைப் பொருள் கடத்தல் மன்னனுக்கு சொந்தமானது.

கடத்தல்காரர்களால் தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆயுதங்களே குறித்த 5 துப்பாக்கிகளும் என சந்தேகிக்கப்படுகின்றது. அவற்றில் ஒன்று பிரதான சந்தேக நபராக தேடப்படும் பொலிஸ் பரிசோதகருக்கு சொந்தமான இடத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையிலேயே, ஏனைய 4 ஆயுதங்களும் பாதாள உலகத்தவர்களின் கைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுவரை சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன் லமாஹேவாவின் ஆலோசனையின் கீழ், விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித்த திஸாநாயக்க, பிரதான பொலிஸ் பரிசோதகர் மாதவ உள்ளிட்ட குழுவின் விசாரணைகளில் 19 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் சிவில் நபர்கள் என்பதுடன் ஏனைய 16 பேரும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர். அவர்களின் பணிகள் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இதில் பொலிஸ் பரிசோதகர் விமலசேன லயனல், உப பொலிஸ் பரிசோதகர்களான கயான் தரங்க பிரேமரத்ன சில்வா, அத்துல ஜயந்த பண்டார, பொலிஸ் சார்ஜன்களான சமிந்த லக்ஷ்மன் ஜயதிலக, சமன் குமார ஜயசிங்க, சமில பிரசாத் வதுகார, பொலிஸ் கான்ஸ்டபிள்களான பிரியங்கர ஜயசேன, ருவன் புஷ்பகுமார, அசாங்க இந்ரஜித் ரத்துகமகே, சமீர பிரதீப் குமார, லக்ஷான் சமீர வன்னியாரச்சி, லலித் ஜயசிங்க ஆகிய 12 பேர் விஷ போதைப் பொருள் மற்றும் அபின், அபாயகரமான ஒளதடங்கள் சட்டத்தின் 80 ஆவது அத்தியாயத்தின் கீழ், எதிர்வரும் 8 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏனைய மூன்று சிவிலியன்களும், உப பொலிஸ் பரிசோதகர் உதார பிரேமசிறி, சார்ஜன்களான தனுக்க, வீரசிங்க மற்றும் கான்ஸ்டபிள் ரத்நாயக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரதான சந்தேக நபராக கருதப்படும் பொலிஸ் பரிசோதகர் இதுவரைக் கைது செய்யப்படாத நிலையில் அவரைத் தேடி நான்கு சி.ஐ.டி. குழுக்களும் உளவுத் துறை குழுவும் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

இதுவரையிலான விசாரணைகள் பிரகாரம், 2015 ஏபரல் மாதம் 15 ஆம் திகதி, ஏபரல் 30 ஆம் திகதி, மே மாதம் 15 ஆம் திகதி ஆகிய திகதிகளில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டு, பிரதான சந்தேக நபர்கள் நல்வருடனும் சேர்ந்து ( பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்ள நான்கு பொலிஸார்) ஏனைய 12 பொலிஸ் உத்தியோகத்தர்களும் குறித்த பிரிவில் உள்ள வழக்குப் பொருட்களை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி கடற்படையினர் கைப்பற்றிய ஐஸ் போதைப் பொருள் 500 கிலோ, 8 கிலோ ஹெரோயின், ஏப்ரல் 2 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட 581 கிலோ 34 கிராம் போதை மாத்திரைகள், 664 கிலோ ஐஸ் போதைப் பொருள் ஆகியனவும் சந்தேக நபர்களால் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. இவை ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ள 100 கிலோ வரையிலான ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுக்கு மேலதிகமான சம்பவங்களாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here