மன்னாரிலும் சுமுகமான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்று வைரஸ் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் கடந்த 29 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை(6) மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்றுள்ளனர்.

முதற் கட்டமாக அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக ஊழியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் பாடசாலைகளை சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் செய்தல், பாட அட்டவணைகளை திருத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (6) 2 ஆம் கட்டமாக தரம் 5 , 11, மற்றும் 13ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இதற்கமைவாக நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு குறித்த வகுப்பகளைச் செர்ந்த மாணவர்கள் இன்றைய தினம் சென்றனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் திங்கட்கிழமை தரம் 5 , 11, மற்றும் 13 ஆம் ஆண்டு மாணவர்கள் சென்றனர்.

குறிப்பாக நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் மாணவர்கள் இன்றைய தினம் மிகவும் ஆர்வத்துடன் பாடசாலைக்குச் சென்றமை அவதானிக்கக்கூடியாதாக இருந்தது.

மாணவர்கள் சுகாதார முறைப்படி முகக்கவசம் அணிந்து பாடசாலைக்குச் சென்ற போதும் பாடசாலை நுழைவாயிலில் மாணவர்களின் உடல் வெப்பம் அளவீடு செய்யப்பட்டு, நுழைவாயிலில் மாணவர்களின் கைகள் சுத்தமாக கழுவி பாடசாலைக்குள் நுழையும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவர்களை பெற்றோர் பாதுகாப்புடன் சுகாதார முறைப்படி பாடசாலைக்கு அழைத்து வருகின்றமையும் அவதானிக்கக்கூடியாதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here