கண்டியிலிருந்த சென்றவர் தமிழகத்தில் வைத்த கல்வெட்டு கண்டுபிடிப்பு… பஞ்ச காலத்திற்குரியது!

சிவகங்கை அருகே இடையமேலூரில் தாது பஞ்ச கால கல்வெட்டைக் கொல்லங்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா.காளிராசா கண்டுபிடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ”இந்தக் கல்வெட்டு இடையமேலூரில் கங்காணி ஊருணி (எ) கங்கா ஊருணிக் கரையில் உள்ள விநாயகர் கோயில் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இது இரண்டரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் உடையது. மொத்தம் 13 வரிகள் எழுதப்பட்டுள்ளன.

அதில் ‘உ’ எனத் தொடங்கி 1877-ம் ஆண்டு மேற்படி ஊரிலிருக்கும் பெரி.மு.நா. நாச்சியப்பன் ஆதிமூல கடவுளர் பேருக்கு வெட்டி வைத்திருக்கும் சண்முக நதி தெப்பக் குளத்திலிருந்து தண்ணீர் பெறுகிற கால்வாய் மேலடி சொல்வார்க்கு திருத்திக் கொடுத்தது தாது வருஷம்’ என எழுதப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கல்வெட்டில் எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றன. 10 மற்றும் 11-ம் வரிகள் மிகவும் தேய்ந்து தெளிவில்லாமல் உள்ளன. தமிழ் ஆண்டுகளில் தாது ஆண்டு பத்தாவது ஆண்டாகும். தாது ஆண்டான 1876-77இல் ஏற்பட்ட பஞ்சம் சென்னை மாகாணத்தில் தலைவிரித்து ஆடியது. தாது பஞ்சத்தை சென்னை மாகாணப் பஞ்சம் என்றே அழைக்கின்றனர். இப்பஞ்ச காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தனர். இதில் மக்கள் கொத்துக் கொத்தாக உணவின்றி இறந்தனர்.

கல்வெட்டில் சொல்லப்படுகிற நாச்சியப்பன் என்பவர் இலங்கை கண்டியை ஒட்டிய பகுதியில் தொழில் செய்து வந்துள்ளார். அதில் கிடைத்த வருவாயில் சொந்த ஊரில் ஊருணியை அமைத்துள்ளார். இத்தகவலை அவரது வம்சாவளியினரும், ஊர்மக்களும் தெரிவிக்கின்றனர்.

மேலும் தாது பஞ்ச காலத்தில் மழையில்லாததால் விவசாயம் பொய்த்துப் போனது. வறுமையில் இருந்த ஊர் மக்களுக்கு ஊருணியை வெட்டும் வேலையை வழங்கி வாழ்வாதாரத்தை அவர் பாதுகாத்து இருக்கலாம். தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்வதற்கான கால்வாயை ஊர்ச்சபை (அ) ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்பது இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. மேலும் தாது பஞ்சகால கல்வெட்டு கிடைத்திருப்பது இன்றைய ஊரடங்கு சூழலில் மக்களின் துன்பத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here