பாட்டனுக்கும் அஞ்சலி செலுத்த முடியாமலிருக்கிறோம்!

தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று புன்னை நீராவி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அக்கராயன் மண்ணிலே அக்கிராச மன்னனுக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மன்னனிற்கு ஒவ்வொரு வருடமும் நாங்கள் பொங்கல் பொங்கி மாலை அணிவித்து வணக்கம் செலுத்துவது வழக்கம். இன்று கரைச்சி பிரதேச சபையினால் அந்த மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்த சென்ற போது அந்த இடத்திலே குவிக்கப்பட்டிருந்த இராணுவமும் பொலிசாரும் இன்று கரும்புலி நாள், அதனைக் கொண்டாட வந்திருக்கிறீர்கள் என்று கூறி மன்னனுடைய சிலைக்கு மாலை அணிவிக்க விடாமல் தடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

மூன்று வருடமாக நாங்கள் வணங்கி வருகின்றோம். இந்த வருடம் மட்டும் என்ன காரணம் எனக் கேட்டபோது காரணம் கூட கூறாது திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். ஈழத்தில் வாழ்ந்த ஈழ மக்களுக்காக ஆங்கிலேயர்களுடன் போத்துக்கீசர் உடன் போராடிய எங்கள் பாட்டனுக்கு வணக்கம் செலுத்த முடியாத ஒரு நாட்டில் தான் நாங்கள் இருக்கிறோம் என்றால் எங்களுடைய சுதந்திரத்தை இழந்தவர்களாக எங்களுடைய அடையாளங்களை இழந்தவர்களாக இருக்கின்றோம்.

எங்கள் அடையாளங்களை அழிக்க வேண்டும் என்பதில் சிங்கள பேரினவாதம் மட்டுமல்ல ஒட்டுக்குழுக்கள் அடிவருடிகள் என அனைவரும் குறியாக உள்ளனர் எங்கள் அடையாளத்தை நிலை நாட்ட தமிழர்களாகிய நாம் ஒரு அணியில் ஒன்றாக வீட்டு சின்னத்துக்கு வாக்களித்து பயணிக்க வேண்டும்

எங்கள் மண்ணுக்காக குரல்கொடுத்தவர்கள் தொடக்கம் எங்களுடைய மூதாதையர்கள் வரைக்கும் எங்களுடைய பரம்பரையை வணங்க முடியாத ஒரு இனமாக நாங்கள் இருக்கிறோம் என்றால் நாங்கள் சுதந்திரமாய் இருக்கிறோமா என்ற கேள்வியை எங்களை நாங்களே கேட்டுக் கொள்ளவேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, கரைச்சி பிரதேசசபையின் உப தவிசாளர் தவபாலன் கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர்கள் கட்சியின் வட்டார அமைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here