காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30

பீஷ்மர்

கருணா கடத்தல் ஒப்ரேசனிற்காக இரகசியமாக பயிற்சி கொடுக்கப்பட்டு தயாராக்கப்பட்ட  போராளிகளில் ஒருவர், பல்வலியை காரணம் காட்டி முகாமிலிருந்து வெளியில் சென்றார், அதற்கு காரணம் காதல். அவரது காதலி, கருணாவின் மகளிர் அணி தலைவி நிலாவினியின் மெய்பாதுகாவலர்.

இத்தனை நாள் தன்னை பார்க்க வரவில்லையென காதலனுடன் அவர் செல்லமாக கோபிக்க, காதலியை சமாதானப்படுத்துவதற்காக உண்மையை உளறிவிட்டார். கிழக்கு தளபதி கருணாவை கடத்த இரகசியமாக தயாராகும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டு, அதில் தானும் ஒருவராக இருப்பதால் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லையென கூறினார்.

கருணா கடத்தலில் புலிகள் சறுக்கிய புள்ளி இதுதான்.

இந்த தகவல்களை தமிழ்பக்கத்தில் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்.

உண்மையை சொன்னால், அந்த இரண்டு போராளிகளிற்கும் அந்த விடயத்தின் முழுமையான தார்ப்பரியம் புரிந்திருக்கவில்லை. ஏதோ சின்ன பிரச்சனையென்பதை போல நினைத்தார்கள். இந்த இரகசியம் வெளியில் கசிவதால் ஏற்படும் விளைவுகளின் பாரதூரதன்மையையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. அதனால்தான் மிகப்பெரிய விளைவுகள் ஏற்பட்டன.

அந்த போராளி, தனது காதலியை சமரசம் செய்ய வேண்டுமென்பதை முக்கியமான விசயமாக கருதினார். அந்த சமயத்தில், கருணா கடத்தல் விசயம் ஒரு பெருட்படுத்தக்க விசயமாக அவர் கருதவில்லை. அதேபோல, காதலியும் தனது பொறுப்பாளரின் மீதான விசுவாசத்தையே முதன்மையானதாக கருதினார். அவர் ஒரு விடுப்பு மனநிலையிலோ அல்லது, தான் விசுவாசமாக நம்பிய தளபதிக்கு ஆபத்து என்றோ கருதினார்.

அந்த பெண் போராளி உடனடியாக நிலாவினியை சந்தித்து, தனது காதலன் சொன்ன தகவலை தெரிவித்தார். கௌசல்யனின் திருமண நிகழ்வு நடக்கும் கொக்கட்டிச்சோலை சிவன் ஆலயத்தில் வைத்து கருணாவை கடத்தும் திட்டம் தயாராகி விட்டது, மட்டக்களப்பு புலனாய்வுத்துறை பொறப்பாளர் நீலன் தலைமையிலான புலனாய்வுத்துறை அணிதான் இந்த கடத்தலை செய்யப்போகிறதென அவர் நிலாவினியிடம் தெரிவித்தார்.

அடுத்த ஒரு சில நிமிடங்களில், தகவல் கருணாவிடம் போய் சேர்ந்தது!

கருணா விவகாரத்தை தொடர்வதற்கு முன்னர், இன்னொரு தகவலையும் இடையில் சொல்ல வேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் மனிதர்கள்தானே. அவர்களிற்கும் மனித உணர்வுகள் உண்டு. காதல், பாசம், நேசம், உறவுகள் இருந்தன. இயன்றவரை இந்த உணர்வுகளிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றை ஒடுக்கி, அமைப்பின் குறிக்கோளில் கவனம் செலுத்தினர். ஆனால், சில சமயங்களில் காதல் உணர்வு மேலோங்கிய சம்பவங்களும் உண்டு.

காதல் உணர்வால் புலிகளின் இராணுவ திட்டங்களிற்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. தனியொருவரை நம்பியதாக இராணுவ திட்டங்கள் இருக்க வாய்ப்பில்லை. அதனால், ஒருவர் சறுக்கினாலும், இன்னொருவர் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால் புலனாய்வு நடவடிக்கைகள் அப்படியல்ல. தனியொருவரின் நடவடிக்கைகளே பிரமாண்ட நடவடிக்கையொன்றை முற்றாக சறுக்கி விழ வைக்கும். அதிலும் புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தமது அடையாளங்களை மறைத்து, செல்வந்தர்கள் போலத்தான் நடமாடுவார்கள். அதனால் அவர்களிற்கு காதல் உறவுகள் ஏற்படும் சந்தர்ப்பமும் அதிகம். நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் காதல் காரணமாக புலிகளின் இரகசிய நடவடிக்கை சறுக்கிய ஒரே சந்தர்ப்பம், கருணா ஒப்ரேசன் மட்டுமில்லை. இன்னும் சில ஒப்ரேசன்களுமுண்டு.

தமிழ்பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து விட்டீர்களா? இல்லையென்றால், இந்த லிங்கை கிளிக் செய்து, லைக் செய்துவிடுங்கள்!

காதலால் சறுக்கிய புலிகளின் இரகசிய ஒப்ரேசன்கள் என்ற தனியான தொடர் ஒன்றே எழுதலாம். அவ்வளவு சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அதற்கான சமயம் வரும்போது பார்க்கலாம். ஆனால், காதலால் சறுக்கிய புலிகளின் மிக முக்கிய ஒப்ரேசன் ஒன்று பற்றிய தகவலை மட்டும் இப்பொழுது குறிப்பிடுகிறோம்.

1998 இறுதி, மற்றும் 1999 இன் நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் நடந்த சம்பவம் இது. இலங்கை பாதுகாப்புதுறையில் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர். பாதுகாப்புதுறையில் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தார் என்றால், யுத்த நடவடிக்கைகளை தீர்மானிக்கும் ஒருவராக!

புலிகளின் கரும்புலி அணி

அவர் இல்லையென்றால் நிச்சயம் அந்த சமயத்தில் இராணுவத்தின் நடவடிக்கைகள் ஆட்டம் கண்டிருக்கும்.

அவரை புலிகள் குறிவைத்தனர். ஏழு வருடமாக மெல்லமெல்ல கொழும்பில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உளவு நெற்வேர்க் ஆட்கள் மூலம் அந்த இரகசிய ஒப்ரேசன் முன்னகர்ந்தது. புலிகளின் இரகசிய நடவடிக்கையாளர் ஒருவர் படிப்படியாக, அந்த இலக்கை நெருங்கினார்.

ஒரு கட்டத்தில் மிக நெருங்கி விட்டார். எவ்வளவு அதிகமாக நெருங்கினார் என்றால்- வாரஇறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த இலக்கின் குடும்பத்துடன் ஒன்றாக இருந்து உணவருந்தும் அளவிற்கு!

இதை படிப்பவர்களிற்கு எவ்வளவு அதிர்ச்சி ஏற்படுமென்பது புரிகிறது. இவ்வளவு நெருங்கியும், ஏன் அந்த தற்கொலை போராளி தாக்குதல் நடத்தவில்லையென்பது. உங்களிற்கே இவ்வளவு அதிர்ச்சியென்றால், இந்த நடவடிக்கையை வன்னியிலிருந்து இயக்கிக்கொண்டிருந்த இந்த நடவடிக்கை பொறுப்பாளரிற்கு எவ்வளவு அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டிருக்குமென யோசித்து பாருங்கள்.

ஒவ்வொரு வார இறுதியிலும் தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குடன் ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவு சாப்பிடுகிறார். தாக்குதல் நடத்துங்கள் என்ற உத்தரவை ஒவ்வொரு வாரமும் வன்னியிலிருந்து கொடுக்கிறார்கள். “இந்தவாரம் நிச்சயம்“ என்றுவிட்டு போனால், பத்திரமாக மாலையில் திரும்பி வந்து கொண்டிருக்கிறார். கேட்டால் ஏதோ சாக்குபோக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் புலிகள் இதை நம்பினார்கள். ஆனால் சில வாரங்கள் போக, இதில் ஏதோ விசயம் இருக்கிறதென்பதை புரிந்துவிட்டார்கள். அது என்ன விசயம் என தேடினால்… இப்பொழுது நாம் சொல்ல போகும் தகவல் புலிகளிற்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றால், உங்களிற்கு இன்னும் பல மடங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

கொழும்பில் தனது இலக்கை நெருங்கியும் அந்த தற்கொலை போராளி ஏன் தாக்குதல் நடத்தவில்லையென்றால்- அவரிற்கு ஒரு காதல் ஏற்பட்டிருந்தது.

இதுகூட பெரிய அதிர்ச்சியில்லை. காதலி யார் தெரியுமா? அந்த இலக்கின் மகள்!

இது ஏதோ ஆங்கில சினிமா பார்ப்பதை போலிருக்கிறதல்லவா. காதலால் சறுக்கிய புலிகளின் ஒப்ரேசன்கள் பற்றிய தகவல்கள் அவ்வளவு விறுவிறுப்பானவை.

சரி, இனி கருணா கடத்தல் விவகாரத்திற்கு வருவோம். கடத்தல் விசயத்தை அந்த பெண் போராளி, தனது பொறுப்பாளர் நிலாவினியிடம் தெரிவித்தார். இது நடந்தது 2004 பெப்ரவரி மாதம் இறுதிப்பகுதியில். கருணா பிரிவதாக அறிவித்த மார்ச் 03ம் திகதிக்கு சில நாட்கள் முன்னதாக.

விடுதலைப்புலிகளும், கருணாவும் தமக்குள்ளிருந்த முரண்பாட்டை வெளியில் காட்டாமல் அதுவரை மௌனமாக இருந்தனர். ஆனால் அந்த இரகசிய மோதல் படிப்படியான வளர்ச்சியை நோக்கி சென்றது. இரு தரப்பும் மோதலிற்கான முதல் அடியை எடுத்து வைக்காமல் இருந்தனர்.

பொட்டம்மான் இரகசிய திட்டம் தீட்டி, புலனாய்வுத்துறை மூலம் தன்னை இரகசியமாக கடத்தும் திட்டம் தீட்டுகிறார் என்பதை அறிந்ததும், கருணா ஒரு அதிரடி முடிவை எடுத்தார். பகிரங்க மோதல் என்ற எல்லைக்குள் நுழையாமல் இரண்டு தரப்பும் பொறுமை காத்து வந்த நிலையில், அந்த பொறுமையை கைவிட்டு, மோதலை ஆரம்பிப்பதென கருணா முடிவெடுத்தார். கருணா இந்த முடிவை எடுத்த பின்னர், சிலருடன் இரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களில் பலர் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள். ஒருவர் மட்டும் இல்லை. கொல்லப்பட்டு விட்டார்.

அவர் தராகி சிவராம்!

பின்னாளில் இவருக்கு புலிகள் மாமனிதர் கௌரவம் கொடுத்ததும் இந்த அரசியல் போட்டியினால்தான். புலிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கருணா குழு வரிசையாக கொல்ல, புலிகள் அவர்களிற்கு அதிகபட்ச கௌரவம் வழங்கினார்கள். சிவராம் விவகாரத்தை பின்னர் குறிப்பிடுகிறேன்.

புலிகளை விட்டு பிரிந்து, அவர்களுடன் மோதலை ஆரம்பிப்பதென கருணா முடிவெடுத்தார். இதற்குள் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும்.

கருணா குழப்பம் ஆரம்பித்ததும் புலிகள் தற்காலிகமாக பேச்சுக்களை ஒத்திவைத்திருந்தனர். இந்த சமயத்தில் கருணா இன்னொரு அதிரடி காரியம் செய்தார். போர்நிறுத்த கண்காணிப்புகுழுவிற்கு இரகசியமாக ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில்- “கருணா அம்மானாகிய நான்தான் புலிகளின் கிழக்கு பிராந்திய தலைவர். கிழக்கு போராளிகள் அனைவரும் எனது கட்டளையைத்தான் ஏற்கிறார்கள். எனது கட்டளைக்கு கீழ்ப்படியும் ஐயாயிரத்திற்கும் அதிகமான போராளிகள் உள்ளனர். நாங்கள் அனைவரும் விடுதலைப்புலிகளை விட்டு பிரிந்து, தனித்து இயங்க முடிவெடுத்துள்ளோம். கிழக்கு தமிழர் வாழும் பிரதேசங்களை கிழக்கு படையணிகள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இனியும் அவர்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். வன்னிப்புலிகளின் நிர்வாகம் இங்கு செல்லாது. நாம் தனித்து செயற்பட முடிவெடுத்துள்ளதால், கிழக்கு விவகாரங்களை கையாள எம்முடன் தனியாக ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே போர்நிறுத்தத்தை முறையாக பேணி, அமைதி முயற்சிகளை முன்னெடுக்க முடியும்“ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில், கருணா பிளவின் பின்னர் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்துகிறோம். கருணா பிளவின் பின் சரமாரியாக கொலைகள் நடந்தன. கருணா குழு இதை செய்கிறதென புலிகள் குற்றம்சாட்டியதுடன், கருணாகுழு துணை இராணுவ குழுவாக செயற்படுகிறதென்பதற்கான ஆதாரங்களை போர்நிறுத்த கண்காணிப்புகுழுவிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் போர்நிறுத்த கண்காணிப்புகுழு எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. கருணா குழுவுடன் தனியாக ஒப்பந்தம் செய்யாத போர்நிறுத்த கண்காணிப்புகுழுவை சங்கடப்படுத்தி, அவர்களின் பணியை சிக்கலாக்கவும் இந்த கொலைகள் நடத்தப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

போர்நிறுத்த கண்காணிப்புகுழுவிற்கு கருணா அனுப்பிய கடிதம், விடுதலைப்புலிகளின் கைகளிற்கும் வந்தது. போர்நிறுத்த கண்காணிப்புகுழு அந்த கடிதத்தை கொடுத்து, “உங்கள் அமைப்பிற்குள் இப்படியெல்லாம் சிக்கலிருக்கிறதா? இப்பொழுது நாங்கள் என்ன செய்வது? அவர்களுடனும் பேசவா?“ என கேட்டனர்.

புலிகளிற்கு பயங்கர கோபம். “எங்கள் உள்வீட்டு பிரச்சனையை நாங்களே பார்த்து கொள்வோம். இதெல்லாம் ஒரு விசயமேயில்லை. எங்களிற்கும் இராணுவத்திற்குமிடையிலான முரண்பாடுகளை மட்டும் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள். மற்றதெல்லாவற்றையும் நாங்கள் பார்த்து கொள்கிறோம்“ என புலிகள் பதிலளித்தார்கள்.

இதன்பின்னர்தான் தமது ஸ்டைலில் பிரச்சனையை முடிக்க முடிவெடுத்து, கருணாவை கடத்த திட்டமிட்டனர். அந்த தகவல் கிடைத்ததும், புலிகளின் பாணியிலேயே பதிலடி கொடுக்க கருணா திட்டமிட்டார். எந்த அணியை கொண்டு ஒப்ரேசனை முடிக்க புலிகள் முடிவெடுத்தார்களோ, அந்த அணியை வைத்தே பிரச்சனையை ஆரம்பிக்கலாமென அவருக்கு நெருங்கியவர்கள் ஆலோசனை சொன்னார்கள்.

புலிகளின் ஒப்ரேசனிற்காக திட்டமிடப்பட்ட நாள் 2004 மார்ச் 03ம் திகதி. அதுவரை பொறுமையாக இருக்க கருணா முடிவெடுத்தார். ஆனால் கொஞ்சம் விவகாரமாக திட்டத்துடன்.

புலிகளின் திட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும், கருணா தனது பாதுகாப்பை அதிகப்படுத்தினார். ஆனால், அது வெளியிலிருந்து பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமையக்கூடாதென்பதில் கவனமாக இருந்தார். தனது பாதுகாப்பை அதிகப்படுத்தினால், அதை புலிகளின் புலனாய்வுத்துறை ஆட்கள் மோப்பம் பிடித்தால், அவர்களிற்கு சந்தேகம் வந்துவிடும் என்பது அவருக்கு தெரிந்திருந்தது.

வெளியில் செல்வதை தவிர்த்து கொண்டார். எந்த நேரமும் தனது முகாமில் பலத்த பாதுகாப்பின் மத்தியிலேயே இருந்தார்.

புலிகளின் புலனாய்வுத்துறையுடன் கருணாவிற்கு முரண்பாடு ஆரம்பித்த சமயத்தில், கருணா வைத்த சில நிபந்தனைகளை சில வாரங்களின் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். “கிழக்கில் இயங்கும் புலிகளின் அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களும் தனது கட்டளையின் கீழ்த்தான் இயங்க வேண்டும், அவர்கள் தனக்குத்தான் பொறுப்புகூறுபவர்களாக இருக்க வேண்டும்“ என அவர் நிபந்தனை விதித்ததை குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அப்போது புலிகள் இதற்கு ஓரளவு உடன்பட்டிருந்தனர். கிழக்கிலுள்ள புலிகளின் கட்டமைப்புக்களின் பொறுப்பாளர்களிற்கு பிரபாகரன் கண்டிப்பான உத்தரவொன்று பிறப்பித்திருந்தார். அது- கருணாவுடன் முரண்படாமல் கிழக்கு நிர்வாக நடவடிக்கைகளை தொடருங்கள் என்பதே.

இதன்பின் கிழக்கில் இயங்கிய புலிகளின் நிர்வாக அலகுகளில் இருப்பவர்களுடன் கருணா அடிக்கடி சந்திப்பை மேற்கொண்டார். நிதித்துறை, காவல்த்துறை, புலனாய்வுத்துறை போராளிகளை தனது முகாமிற்கு அழைத்து அடிக்கடி சந்தித்தார். தமது வேலைகள் தொடர்பாக அவர்கள் கருணாவிற்கு பொறுப்புகூற வேண்டியதில்லை, என்ன செய்கிறோம்… அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற தகவல்களையும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த தொடர் தமிழ்பக்கத்தின் பிரத்தியேக தொடர். ஆனால், கருணாவின் மனதை சமாதானப்படுத்த கருணா அழைக்கும் சமயங்களில் சென்று வந்தார்கள்.

2004 மார்ச் 01ம் திகதி விடிந்தது. அதாவது கௌசல்யனின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முதல். புலிகளின் ஒப்ரேசனிற்கு இரண்டு நாட்களின் முன்னர்!

அன்று கருணாவிடமிருந்து ஒரு உத்தரவு பறந்தது. “இன்று இரவு முக்கியமான சந்திப்பொன்று உள்ளது. அனைவரும் மீனகம் முகாமிற்கு வாருங்கள்“ என்ற உத்தரவு யாருக்கு சென்றது தெரியுமா? நீலனிற்கு!

நீலன்

மட்டக்களப்பு புலனாய்வுத்துறை துணை பொறுப்பாளராக இருந்தவர் நீலன். ஆரையம்பதியை சேர்ந்தவர். கருணாவை கடத்தும் ஒப்ரேசனை திட்டமிட்டவரும் அவர்தான். அதை செயற்படுத்தவிருந்தவரும் அவர்தான்.

அதை சாதாரண அழைப்பாக நினைத்தார் நீலன். “எத்தனை மணிக்கு சந்திப்பு?“ என நீலன் தரப்பிலிருந்து கேட்கப்பட, கருணாவின் தொலைத்தொடர்பாளர் அறிவித்தார்- “இன்று இரவு எழு மணிக்கு. மீனகத்தில்“ என.

கருணா வழக்கமாக அடிப்படி இப்படியாக சந்திப்புக்களை வைத்தார். கிழக்கில்அனைத்தும் தனது நிர்வாகத்தின் கீழ் செயற்படுகிறதென காண்பிப்பதற்காகவே இப்படி செயற்படுகிறார், இது ஒரு உளவியல் பிரச்சனையென அந்த போராளிகள் நினைத்திருந்தனர். அதனால், அன்றிரவு சந்திப்பிற்கு செல்ல முடிவெடுத்தனர்.

அதேவேளை, கருணாவின் முகாமில் இரகசிய திட்டம் ஒன்று தயராகியிருந்தது. அது-சந்திப்பிற்கு வரும் புலனாய்வுத்துறை போராளிகளை கைது செய்வது!

(தொடரும்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here