மாவை சேனாதிராசாவை தோற்கடிக்க கட்சிக்குள்ளேயே சதி?: பிரச்சார கூட்டத்தை அதிரடியாக இடைநிறுத்தினார்!

இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக, அவரின் காலடியில் வளர்ந்த சில கட்சி உறுப்பினர்களே சதி செய்யும் தகவல் வெளியாகியுள்ளது.

தனது காலடியில் இருந்தபடி, தன்னைதேர்தலில் தோற்கடிக்க மேற்கொள்ளப்படும் சதி குறித்து மாவை சேனாதிராசா தரப்பும் விலாவாரியாக அறிந்து வைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று அளவெட்டி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார கூட்டமொன்றை உடனடியாக நிறுத்தும்படி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாவை சேனாதிராசாவின் சொந்த தொகுதியாக வலிவடக்கில், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை மாவை சேனாதிராசா இதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தனது தனிப்பட்ட உதவியாளராக இருந்த சோ.சுகிர்தனை பிரதேசசபை தவிசாளராக்கினார்.

அவர் தவிசாளராகியதில் இருந்த பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்கள் பிரதேச மக்களாலும், பொது அமைப்புக்களாலும் சுமத்தப்பட்டு வந்தது. குறிப்பாக அபிவிருத்தி திட்டத்துடன் தொடர்புடைய நிதி விவகாரங்களிலும்சில முறைப்பாடுகள் பொது அமைப்புக்களால், மாவை சேனாதிராசாவின் மகனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அதுவரை மாவையின் உதவியாளராக இருந்து, முறைப்பாடுகள் மாவையை சென்றடையாமல் தடுத்து வந்த தரப்பினர், இதனால் வெலவெலத்து, கலையமுதனுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்.

அத்துடன், கட்சிக்குள்ளேயே மாவையின் போட்டித் தரப்புக்களுடன் கைகோர்த்து செயற்பட்டனர்.

பொதுவாகவே எல்லா கட்சிக்குள்ளும் வசதி வாய்ப்புக்களிற்காக அணி தாவும் ஒரு பகுதியினர் இருப்பார்கள். அந்த வகையினரான, வலி வடக்கு பிரதேசசபையை சேர்ந்த 4,5 உறுப்பினர்கள் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக செயற்பட தொடங்கியிருந்தனர். மாகாணசபை ஆசனம் உள்ளிட்ட சில எதிர்பார்ப்புக்களுடன் இந்த தரப்புக்கள் இயங்கின.

ஏற்கனவே சுன்னாகம் பிரதேசசபை தவிசாளராக இருந்து, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மருதனார்மட விடுதியில் சிங்கள விபச்சார அழகியுடன் உல்லாசமாக இருந்து விட்டு, பணம் செலுத்தாமல் தப்பிக்க முயன்று, பொலிஸ் நிலையம் வரை சென்று திரும்பிய ஒருவர், பின்னர் கட்சிக்கு எதிராக பிரதேசசபை தவிசாளர் தெரிவில் செயற்பட்டதற்காக நீக்கப்பட்டிருந்தார். தற்போது மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தில் நடந்த சுமந்திரனின் பிரச்சார கூட்டத்தையும் அவர்தான் ஏற்பாடு செய்திருந்தார். அதில் மாவை சேனாதிராசா அவமதிக்கப்பட்டிருந்தார்.

மாவைக்கு எதிரான வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் குழுவுடன், சுன்னாக கூட்ட ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் கைகோர்த்து செயற்பட்டு வந்தனர். இந்த குழுவினர் நாடாளுமன்ற தேர்தலில் மாவை சேனாதிராசாவை தவிர்த்து, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அளவெட்டியில் பிரச்சார கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இது. இதில் சம்பிரதாயபூர்வமாக மாவை சேனாதிராசாவிற்கு மிக தாமதமாக தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது தொகுதியில், தன்னால் கட்சிக்கு கொண்டு வரப்பட்டவர்கள், தனக்கே அல்வா தர முயல்வதை கவனித்துக் கொண்டிருந்த மாவை, இன்று அதிரடியாக செயற்பட்டு கூட்டத்தை நிறுத்த உத்தரவிட்டார்.

இன்று காலையில் இளங்கலைஞர் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், அனைத்து வேட்பாளர்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும், பிரதான கூட்டங்கள் தனி வேட்பாளர்களிற்காக நடத்தப்பட முடியாது, கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் அழைக்கப்பட வேண்டுமென முன்னதாகவே ஒரு அறிவுறுத்தல் வழங்கினார்.

அந்த அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று மாலை நடக்க திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை இடைநிறுத்தி, அனைத்து வேட்பாளர்களையும் உள்ளடக்கியதாக நடத்த உத்தரவிட்டுள்ளார்.

தலைவர் மாவை சேனாதிராசா, கட்சியை கட்டுக்குள் கொண்டு வர அண்மைய நாட்களில் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள் கட்சிக்குள் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here