முதலாளியின் வர்த்தக நிலையத்தில் நகை திருடி முச்சக்கர வண்டி வாங்கிய இளம் காதல் ஜோடி சிக்கியது!

தான் பணியாற்றிய வர்த்தக நிலையத்தில் நகை களவாடி, காதலனுடன் இணைந்து முச்சக்கர வண்டி கொள்வனவு செய்த யுவதியையும் அவரது காதலரையும் மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவது,

மஸ்கெலியா நகரில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணிபுரிந்த யுவதி அந்த நிறுவன உரிமையாளரின் மனைவியுடைய தங்க மாலையைக் களவாடிச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் நேற்று 3 ஆம் திகதி மாலை குறித்த யுவதியும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞருமாவர்.

நேற்று 3 ஆம் திகதியன்று தனது வீட்டில் உள்ள அலுமாரியைத் திறந்து நகைப் பெட்டியிலிருந்த 15 பவுண் தங்க மாலை காணவில்லை என்பது தெரியவந்தன் பின்னர் அங்கு பணியாற்றி வந்த யுவதியின் மேல் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கு அமைய சந்தேக நபரைcஒரு மணி நேரத்திற்குள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, மஸ்கெலியா நகரில் இயங்கி வரும் தங்க நகை அடகு பிடிக்கும் நிறுவனமொன்றில் 4 இலட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாகவும் அந்த பணத்துடன் மேலதிகமாக 30,000 ரூபாய் சேர்த்து 4 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய்க்கு பிற்கொடுப்பனவு முறையில் முச்சக்கர வண்டி ஒன்றைப் பெற்றுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அத்துடன் சந்தேக நபரின் வாக்குமூலத்திற்கு அமைய காட்மோர் தோட்ட கல்கந்தை பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய நபரிடமிருந்து முச்சக்கர வண்டியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த விசாரணையை ஹட்டன் வலய அதிகாரி சூழனி வீரரட்னவின் பணிப்புரையில் அப்பகுதிக்குப் பொறுப்பான ரசிக்க ரட்நாயக்க மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரியுடன் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து மேற்கொண்ட புலன் விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரையும் இரண்டு மணிநேரத்திற்குள் கைது செய்த நிலையில் இன்று 4ஆம் திகதியன்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here