போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கஞ்சாவை பறித்து விற்றது இராணுவ புலனாய்வு பிரிவினரா?: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

தொண்டமனாறு சின்னமலை ஏற்றத்தில் 25 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்ட நிலையில் அதன் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு உறுப்பினர்களுடன் இணைந்து 174.6 கிலோ கிராம் கஞ்சாவை கடத்திச் சென்று விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை சின்னமலை ஏற்றம் பகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலை 25 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் இரண்டை சிறப்பு அதிரடிப் படையினர் மீட்டனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தகவலின் அடிப்படையில் இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணையை முன்னெடுத்தினர். அதன்போது அதிர்ச்சி தகவல் வெளியானது. 174.6 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கடத்தல் காரர்களிடமிருந்து மிரட்டிப் பெறப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தொண்டமனாறைச் சேர்ந்த ஒருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

“இந்தியக் கடல் எல்லையிலிருந்து படகு மூலம் தொண்டமனாறு, சின்னமலை ஏற்றம் கடற்கரை பகுதியில் படகு ஒன்றில் அதிகாலை வேளை எடுத்துவரப்பட்ட 199.6 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கூலர் வாகனம் ஒன்றின் மூலம் சாவகச்சேரியில் உள்ள கஞ்சா வியாபாரிக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தது.

எனினும் இராணுவப் புலனாய்வாளர்கள் இருவரும் நானும் இணைந்து கூலர் வாகனத்தில் கஞ்சாவை ஏற்ற முற்பட்ட இருவரை கைகளில் விலங்கிட்டு கைது செய்வது போன்று மிரட்டினோம். அவர்களிடமிருந்து கஞ்சா பொதிகளைக் கைப்பற்றிவிட்டு, தப்பி ஓடுமாறு பணித்தோம்.

அவர்கள் இருவரும் படகு ஓட்டியும் அங்கிருந்து தப்பித்த பின்னர் கஞ்சா பொதிகளை வீடொன்றுக்கு எடுத்துச் சென்று பொதி செய்தோம். அதன் ஒரு பகுதியான 25 கிலோ கிராம் எடையுடைய இரண்டு பொதிகளை அவ்விடத்தில் போட்டுவிட்டு சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கினோம். மீதமுள்ள 174.6 கிலோ கிராம் கஞ்சா பொதிகளையும் தொண்டமனாறு பாலத்துக்கு அண்மையாக மறைத்து வைத்தோம்” என்று சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கினார்.

சம்பவம் இடம்பெற்ற இடங்களுக்கு சந்தேக நபர் அழைத்துச் செல்லப்பட்டார். அதில் சின்னமலை ஏற்றம் பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா பொதிகள் உடைத்து பொதி செய்யப்பட்ட தடையங்கள் கிடைத்துள்ளன. எனினும் தொண்டமனாறு பாலத்துக்கு அண்மையாக கஞ்சா போதைப்பொருள் மறைக்கப்பட்ட இடத்தில் எவையும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சந்தேக நபர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் முற்படுத்தப்பட்டார். சந்தேக நபரை வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், வழக்கு விசாரணைகளைத் துரித்தப்படுத்த பொலிஸாரை அறிவுறுத்தினார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here