டி.பி.எஸ் எழுதும் ஊகக்கட்டுரைகள்: தமிழ் அரசு கட்சி கண்டனம்!

கனடாவில் இருந்து ஊகத்தில் கட்டுரைகள் எழுதும் டி.பி.எஸ்.ஜெயராஜின் தவறான தகவல்களிற்கு, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் முறையான விளக்கம் வழங்கியுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு அணியில் புதிதாக இணைந்து கொண்டுள்ள டி.பி.எஸ்.ஜெயராஜ் அண்மையில் முற்றிலும் தவறான தகவல்களின் அடிப்படையில், கொழும்பு ஆங்கில பத்திரிகைக்கு கட்டுரை எழுதியிருந்தார்.

அதற்கு சீ.வீ.கே.வழங்கியுள்ள விளக்கம்-

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கிளம்பியிருக்கும் சுமந்திரனின் எதிர்ப்பு” என்ற தலைப்பில் தங்கள் பத்திரிகையில் 23.06.2020 மற்றும் 24.06.2020 ஆம் திகதிகளில் திரு.டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதிய கட்டுரை தொடர்பாக சில தெளிவுபடுத்தல்களை வழங்க வேண்டியது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் என்ற ரீதியில் எனது கட்டாய கடமை என்ற அடிப்படையிலேயே எமது கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.

விடயத்துக்கு வருமுன்பு கட்டுரையாளரான டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்களை 1984 ஆம் ஆண்டி லிருந்தே அறிந்தவன் நான் என்பதைக் குறிப்பிட்டு அவர் ஐலண்ட் பத்திரிகையின் 06.06.1984 ஆம் திகதிய பதிப்பில் “Why was Amir invited to open new Jaffna Library?. Special Commissioner asked to explain” என்ற தலைப்பில் அப்பொழுது யாழ்ப்பாண மாநகர ஆணை யாளராகவிருந்த நான் அமரர் அமிர்தலிங்கத்தை கொண்டு யாழ்ப்பாண பொது நூலகத்தை திறப்பித்தமைக்காக எனக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு விளக்கம் கோரியது தொடர்பான செய்தியாகும். இதன் செய்தியாளர் திரு.ஜெயராஜ் அவர்களே.

ஆகவே நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் மூத்த ஊடகவியலாளர் அவர் என்பதையும் பதிவு செய்து கொள்கின்றேன்.

நான் மேலே குறிப்பிட்ட கட்டுரையில் கூறப்பட்ட விடயங்கள் ஊகங்களின் அடிப்படையில் அல்லது வேண்டுமென்றே திட்டமிட்ட தவறான தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. அவை எல்லாவற்றிக்கும் கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. திரு. ஜெயராஜ் அவர்களின் கட்டுரை திரு. சுமந்திரன் 08.05.2020 ஆம் திகதி சிங்களத்தில் வழங்கிய பேட்டியை மையப் பொருளாகக் கொண்டதாகக் காணப்படுகின்றது. – கட்டுரை அந்த வரையறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் அதன் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா அவர்களைப் பற்றி தெரிவித்த பல கருத்துக்கள் கவலைக்குரியவை.
ஜனநாயகம் என்றாலே அது மென்வலு தாராளவாதம், மிதவாதம், தீவிரவாதம், கருத்து மோதல்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான்.

திரு சுமந்திரனின் பேட்டி விபரம் 10.05.2020 ஆம் திகதி வெளிவந்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் ஏனைய பலரும் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மாவை சேனாதிராசா அவர்களுக்கு தெரிவித்த வண்ணம் இருந்த நெருக்கடி காரணமாக 11.05.2020 ஆம் திகதி மாலையில் தமது கருத்தை அறிக்கை மூலம் தெரிவித்தார். அதற்கு முன்பாக அவர் திரு.சுமந்திரனுடன் தொலை பேசியில் தொடர்புகொண்ட போதும் அது முடியாமல் போனது. அந்நாட்களில் திரு.சுமந்திரன் முக்கியமான நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையால் இந்த தொடர்பாடல் நிகழாமல் இருந்திருக்கலாம். தேவைக்கேற்ப கருத்துத் தெரிவிக்கவோ அறிக்கை வெளியிடவோ கட்சித் தலைவருக்குரிய உரித்தை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது.

ஆனால் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டது போல கண்டனம் செய்வதாகவோ திரு.சுமந்திரனை ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றோ திரு.மாவை சேனாதிராசா ஒரு சொல் கூட கூற வில்லை. இந்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் திரு.சுமந்திரன் தெரிவித்த கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாள ராகவோ தனிப்பட்ட முறையிலோ தெரிவித்த கருத்தாகவும் ஏற்க முடியாதது என்பதுதான். இது கட்சியின் நிலைப்பாட்டின் தெளிவுபடுத்தலே. இந்த விடயத்தில் நான் வெளியிட்ட அறிக்கையில் கூட இந்த மாதிரி யான கருத்துக்களை கூறவில்லை என்பதையும் பதிவு செய்ய விரும்புகின்றேன். திரு. மாவை சேனாதி ராசா அவர்களின் அறிக்கை விடுதலைப் புலிகள் அமைப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற் பாடுகள் தொடர்பான வரலாற்று பதிவாகவே இருந்தது. இவை எதுவும் திரு. சுமந்திரனுக்கு எதிரானவை அல்ல.

நடந்த சம்பவங்கள் ‘சுமந்திரனுக்கு எதிரான சதி’’ என்று பலர் தமக்கு வர்ணித்ததாக கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் “மாவைக்கு எதிரான சதி” என்ற செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்ததும் உண்டு.

இந்த விடயத்தில் கட்டுரையாளர் மாவை சேனாதிராசா அவர்களை இலக்கு வைத்து குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நான் விசாரித்து அறிந்த வகையில் அவர் சுமந்திரனுக்கு எதிராக அறிக்கை விடும்படி எவருக்கும் கூறவேயில்லை என்பதை உறுதிப்டத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவ்வாறான நிலை தொடரக்கூடாது என்பதற்காக தமது அறிக்கையை அவசரமாக வெளியிட்டார் என்பதுதான் உண்மை. இந்தக் கட்டுரையில் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனின் அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்படும் உரிமை சேனாதிராசாவின் மகன் என்பதால் அவருக்கு மறுக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் அவரை ஒரு மாகாண அமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணம் மாவை சேனாதிராசாவுக்கு துளியும் இல்லையென்பதையும் உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கிறேன் இது வெறும் குரோதக் கற்பனையே.

இளைஞர்கள் உள்ளீர்ப்பு மற்றும் பெண்கள் உள்ளீர்ப்பு என்பன தமிழரசுக் கட்சியில் எழுபது வருடங்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்தமையால்தான் தமிழரசுக் கட்சி இன்று வரை நிலைத்து நிமிர்ந்து நிற்கிறது. இது கட்சியின் இயல்பான தொடர்ச்சியான அடிப்படைக் கொள்கையாகும். இது ஒரு புது விடயம் அல்ல.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தலைமை அலுவலகம் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலேயே அமைந்துள்ளது. அப்படியிருக்க அங்கே ஏதோ “மார்ட்டின் றோட் மாஃபியா” இருப்பதாக கூறுவது மிகவும் அபத்தமானதும் கட்சியை அவமதிப்பதுமாகும். அப்படி ஒரு மாஃபியா இயங்கினால் அது பற்றி ஆதாரபூர்வமாக எழுத வேண்டும். இவ்வாறான ஒரு கருத்தை ஜெயராஜ் அவர்கள் எழுதியமை மிகவும் கவலைக்குரியது.

மேலும் இந்தக் கட்டுரையின் “இந்தக் கொந்தளிப்பு தற்சமயம் ஓய்ந்துவிட்டது போல் தோன்றுகின்றது” என்றும்

“நிதானம் மேலோங்கி உள் நெருக்கடி முடிவிற்கு வந்திருப்பது போல தெரிகிறது” என்றும் எழுதப்பட்டி ருகிறது.

இப்படிக் குறிப்பிட்ட பின்னர்; உள்முரண்பாடுகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் இவ் வாறான கட்டுரை வெளியிடுவதை அவர் தமிழின நலன் சார்ந்து தவிர்த்திருக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரையில் காணப்படும் பல விடயங்கள் ஊகங்களின் அடிப்படையில் தமிழரசுக் கட்சிக்கும் அதன் தலைவருக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைந்தமை பற்றி தாங்களும் ஊடக தர்மத்தின் அடிப்படையில் ஆராய்ந்து வெளியிட்டிருந்தால் மனக் கசப்புக்களும் உட்கட்சி முரண்பாடுகளும் ஏற்படாதிருக்க வழி சமைந்திருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here