13 இற்கும் அப்பால் சென்று அதிகார பகிர்வு: யாழில் சஜித்!

ஐக்கிய தேசியக் கட்சியினர் கோத்தபாயவுடன் இணைவதற்கு பல டீல்கள் போட்டு வருவதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான வேட்பாளர் சஜித் பிரேமதாச, கள்ளர்கள், துரோகிகள் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைய மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் கள்ளர்கள், மண் கொள்ளையர்கள், துரோகிகள் போன்றவர்களுடன் நாம் இனி எந்த சந்தர்ப்பத்திலும் கூட்டு சேர மாடடோம். ஐக்கிய தேசியக் கடசியினர் கோத்தபாய அரசுடன் இணைந்து செயற்பட பல டீல்களை போட்டு வருகின்றனர்.

நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற போராடுவது இந்த நாட்டு மக்களுக்காகவும் நாட்டினை அபிவிருத்தி பாதையில் கொண்டு சென்று பயணிப்பதற்காகவுமே. தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக இந்த நாட்டுக்குள் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பேன்.

நான் எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த நாட்டில் இடம்பெற்ற பல ஊழல் குற்றச்சாட்டுக்களை, பாரிய மோசடிகளை வெளிக்கொண்டு வந்தேன். மக்களுக்கு அவற்றை வெளிப்படுத்தினேன். நடைபெற இருக்கின்ற தேர்தலில் மக்கள் எனக்கு பலமான ஒரு பிரதிநிதித்துவத்தை தந்தால் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் கைத்தொழில் துறைகளை உருவாக்கி சுயதொழில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி ஓர் புதிய அபிவிருத்தி பிரதேசமாக மாற்றுவேன்.

அதேபோல் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைந்த போதிலும் எமது நாட்டில் எரிபொருட்களின் விலைகள் இன்றுவரை குறையவில்லை. எனவே நான் பதவிக்கு வந்தால் 24 மணி நேரத்திற்குள் எரிபொருட்களின் விலையை உடனடியாகவே குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலே நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் கிராம மட்டத்தில் இருந்து நகரம் வரைக்கும் துரித அபிவிருத்தியை முன்னெடுப்பேன். அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு என்ற பாரபட்சமின்றி சகல இடங்களுக்கும் சமமான அபிவிருத்திகளை நான் முன்னெடுப்பேன் என்பதே இந்த சந்தர்ப்பத்திலே உறுதி மொழியைத் தருகிறேன். எனவே இந்த தேர்தலில் பலப்படுத்தி என்னை பிரதமராக்க மக்கள் ஆணை தரவேண்டும்.

நான் இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறப் போராடுவதன் பிரதான நோக்கம் பொருளாதாரத்தில் வீழ்ந்துள்ள எனது நாட்டினை மீள கட்டியெழுப்பவே. அதேபோல இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நான் நன்கு அறிவேன். அதனால் தான் நான் எனது அரசியல் நடவடிக்கையை அட்டவனை படி நடாத்திக் கொண்டிருக்கின்றேன். இந்த நாட்டில் உள்ள மக்களுக்காக அரசியல் அபிவிருத்தி ஆகிய இரண்டையும் பெற்றுக்கொடுப்பேன். நான் அரசியலுக்காக மேடைகளில் வெறுமனே வாக்குறுதிகளை தந்துவிட்டு ஓடுவான் அல்ல.

இந்த நாட்டில் நீதித்துறை என்பது அனைவருக்கும் சமமானது. நீதி அனைவருக்கும் சமமாகவே பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்றவையில் நீதியை பயன்படுத்தக் கூடாது. இந்த நாட்டில் உள்ள முப்படையினருக்கு பிரதான கடமைகள் உள்ளன. அது இந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும். அதன் ஊடாக எமது தாய் நாட்டினை காக்க வேண்டும்.

ஏனைய விடயங்களை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும். அண்மைய நாட்களாக பாதுகாப்பு தரப்பினர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் நாம் அது தொடர்பில் தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். பாதுகாப்பு தரப்பினர் அவ்வாறு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது நல்லது அல்ல. இது நீதிக்கு எதிரான செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்.

இந்த நாட்டில் அரசியல் தீர்வுக்கான பிரச்சனை உள்ளது. நான் பிரதமராக ஆட்சி பீடம் ஏறினால் 13 ஆவது திருத்த சட்ட்டமூலத்தினை ஏற்று நடப்பேன். அதில் உள்ள மாகாண சபை முறைமையை முறையாக பின்பற்றுவேன்.

மேலும் அதற்கும் அப்பால் அதிகாரங்களை பகிந்தளிக்க நடவடிக்கையை நிச்சயமாக எடுப்பேன். ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்க முழு நடவடிக்கையும் எடுப்பேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here