காணாமல் போனவர்கள் பற்றி அரசு பதிலளிக்க தேவையில்லை; கூட்டமைப்பிலேயே பழி: போராட்டக்காரர்கள்!

கோப்பு படம்- வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி இராணுவத் தளபதியோ அரசோ பதில் கூற வேண்டிய தேவையில்லை, பதில் சொல்ல வேண்டியவர்கள் மாவையும் கூட்டமைப்புமே என்று வவுனியா மாவட்டத்தில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,

தேர்தல் நெருங்கி வருவதால் மாவை தனது வேஷத்தை மாற்றுகிறார். இலங்கை இராணுவமோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கமோ இனப் போரின்போதும் அதற்குப் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி ஆராயாது. இதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்கும், சக்தி வாய்ந்த சர்வதேச நாடுகளுக்கும், தமிழர்களுக்கும் மற்றும் மனிதநேய ஸ்தாபனங்களுக்கும் ஸ்ரீலங்கா சிங்கள தலைவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள்.

இதனால் எமது காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் பற்றி
சிங்களவர்களிடம் கேட்பது அர்த்தமற்றது.

மாவை மற்றும் அவரது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான நண்பர்கள் கடந்த 11 ஆண்டுகளாக தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆனால் யு.என்.எச்.ஆர்.சி அல்லது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒருபோதும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான எந்த கேள்வியையும் எழுப்ப மறுத்தனர். குறிப்பாக இலங்கைக்கு உதவும் நாடுகளிடம் கூட கேட்க மறுத்தார்கள்.

கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றத்தை பாதிக்கும் என்பதால், அதிகாரம் உள்ள நாடுகளை அவர்கள் கேட்க விரும்பவில்லை. மாவை மற்றும் அவரது நண்பர்கள் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் புகார் செய்தால், ஸ்ரீலங்காவால் கொடுக்கப்படும் அனைத்து வரப்பிரசாதங்களும் இழக்கப்படும்.

திரு. சம்பந்தன் காணாமல் ஆக்கபட்ட தமிழர்களின் உறவினர்களிடம் சிறைச்சாலைக்கான சாவி தன்னிடம் இல்லை என்று கூறி தமிழர்களை அவமதித்த போது அவர் உதயன் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார் என்பதை சில ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையில் பார்த்திருந்தோம். எனவே வரும் இந்த தேர்தலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் நன்றாக தெரியும்.

எனவே எதிர்வரும் தேர்தலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிற சக்திவாய்ந்த நாடுகளின் தலைநகரங்களுக்கு பயணிக்கக்கூடிய, தர்க்கரீதியாக விவாதிக்கக்கூடிய, வழக்கறிஞர்கள், , துணிந்தவர்கள், உலக அரசியல் தெரிந்த, ஆங்கிலம் நன்றாகப் பேசக்கூடியவர்கள், தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் வாழும் , கொசோவோ, கிழக்கு திமோர், போஸ்னியா போன்ற நாடுகளின் அரசியல் போராட்டம் தெரிந்தவர்களுக்கு வாக்களியுங்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்க கூடிய வழிமுறைகளை உலகத் தலைவர்களுக்கும் விரிவுபடுத்தி கூறக்கூடிய தமிழ் தலைவர்கள் எமக்குத் தேவை.

மேலும், இந்த இளம் வழக்கறிஞர்கள் தமிழர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்தின் தேவைக்காக,  சரியான காரணங்களுடன் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும், யு.என்.எச்.ஆர்.சி உறுப்பு நாடுகளை இணங்க வைக்க கூடிய விவாதம் வைக்க கூடிய தமிழ் தலைவர்கள் எமக்கு இத்தேர்தலில் நிச்சயம் தேவை.

மாவை மற்றும் அவர்களின் நண்பர்களை மீண்டும் பாராளுமன்றம் அனுப்பினால் தமிழர்கள் 5 வருடத்தில், நல்லாட்சி என்ற பெயரில், இருந்த இடமே தெரியாமல் இருந்தனர் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here