நுவரெலியாவில் மொட்டு மலர்வது உறுதி!

நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் அனைவரும் சரித்திர வெற்றி பெறுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்ன நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமாகிய பிலிப்குமார் தெரிவித்தார்.

தலவாக்கலை பகுதிகளில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மலையக மக்களுக்கும், மலையகத்தின் இளைய சமூகத்திற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாரிய சேவையாற்றியிருக்கிறது. இதனை மலையக மக்களும் நன்கு அறிவார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலும், மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் மலையக கல்விக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது.

402 ஆசிரியர் நியமனம், தோட்டப்பாடசாலைகளை அரசாங்க பாடசாலைகளாக பொறுப்பேற்றது. தோட்டப்பாடசாலைகள் எல்லாவற்றிற்கும் இரண்டு ஏக்கர் காணி பெற்றுக்கொடுத்தது, 3174 ஆசிரியர் நியமனம், கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, ஸ்ரீபாத கல்வியல் கல்லூரி, சீடா செயற் திட்டம், ஜு.சி செட் திட்டம், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், கடைசியாக 3000ம் உதவி ஆசிரியர் நியமனம் மற்றும் மத்திய, ஊவா மாகாணங்களில் தமிழ் கல்வி அமைச்சு வரையில் கல்விக்காகவும் அதை தவிர 2500 மொழி பெயர்ப்பாளர் பதவி, மலையகத்திற்கான தமிழ் கிராம சேவையாளர் நியமனம், மலையக இளைஞர்களை பொலீஸ் சேவைக்கு இணைத்துக்கொண்டவை இவை எல்லாமே மலையகத்திற்கான விசேட வேலைத்திட்டங்களாகும்.

இதை தவிர அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தேசிய ரீதியிலான வேலைத்திட்டங்களிலும் மலையகத்தை உள்வாங்க வைத்திருக்கிறது. இப்படி எண்ணில் அடங்கா சேவைகள் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு வாக்களிக்க மலையக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். எனவே இத்தேர்தலில் நாம் வெற்றிபெறுவது உறுதி என அவர் தெரிவித்தார்.

-தலவாக்கலை பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here