மட்டக்களப்பில் அரச அலுவலகங்களிற்குள் அடாத்தாக நுழைந்து பிரச்சாரம்; வாயில் கதவை மூடி வைக்க அறிவுறுத்தல்!

மட்டக்களப்பில் தேர்தல் விதிமுறைகளை கிஞ்சித்தும் கணக்கிலெடுக்காமல் அடாவடியாக தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகிறது. அரச அலுவலகங்களிற்குள் அத்துமீறி நுழைந்து வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடும் நிகழ்வுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிற்குமிடையில் போட்டி போட்டுக்கொண்டு இடம்பெற்று வருகிறது.

இரண்டு கட்சிகளிலுமுள்ள பொறுப்பு வாய்ந்த- தேர்தல் சட்டங்களை நன்கறிந்த- இருவரே இந்த விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சட்டத்தரணி மாணிக்கப்போடி மங்களேஸ்வரி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ஆகியோரே, பாரதூரமான தண்டனைக்குரிய தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இருவரும் மாவட்த்திலுள்ள அரச அலுவலகங்களிற்குள் நுழைந்து அரச உத்தியோகத்தர்கள் மத்தியில் துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச அலுவலகங்களின் பொறுப்பு அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போது, அதை கருத்தில் எடுக்காமல் அவர்கள் இருவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெல்லாவெளி, கிரான், வாகரை பிரதேச செயலகங்களில் அண்மை நாட்களாக இருவரும் உள்நுழைந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கிரான் பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் அனுமதிக்காத போதும், மா.உதயகுமார் உள்நுழைந்து துண்டுப்பிரசுரம் விநியோகித்தார்.

வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் மங்களேஸ்வரி நுழைந்து பிரச்சாரத்தில் ஈடுபட முயற்சித்தபோது, பிரதேச செயலாளர் அதை அனுமதிக்கவில்லை. எனினும், அதை மீறி பிரதேச செயலாளரின் மேசையில் துண்டுப்பிரசுரத்தை வைத்ததுடன், அனைத்து ஊழியர்களிற்கும் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.

இது அதிகாரிகள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, வேட்பாளர்கள் நுழையாமல் தடுக்க பல அலுவலகங்களின் வாயில்க்கதவுகளை மூடவும், காவலாளியை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here