காணாமல் போனவர்கள் வெளிநாட்டில் இருக்கலாம்… அல்லது இறந்திருக்கலாம்; யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்: மஹிந்த!

காணாமல் போனவர்கள் ஒன்றில் வெளிநாட்டில் இருக்க வேண்டும். அல்லது இறந்திருக்க வேண்டும். இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

தமிழ் பத்திரிகையாளர்களுடன் இன்று நடத்திய கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.

“காணாமல் போனவர்கள் பிரச்சனையை நான் புரிந்து கொண்டுள்ளேன். தேர்தலின் பின்னர் அவர்களுடன் கலந்துரையாட முடிவு செய்துள்ளேன்.

காணாமல் போனவர்கள் ஒன்றில் வெளிநாட்டில் இருக்க வேண்டும். அல்லது இறந்திருக்க வேண்டும். இந்த யதார்த்தத்தை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். இதை புரிந்து நட்டஈடு போன்ற ஏதாவதொரு மாற்றுத் திட்டத்திற்கு உடன்பட வேண்டும்“ என்றார்.

பிறிதொரு கேள்விக்கு பதிலளிக்கையில், கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு தமிழர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தற்போது பொருத்தமான ஒருவரை தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசை ஆதரிக்க தயாரென அறிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவை வரவேற்கிறேன். அவர்களுடன் பேச்சு நடத்த அரசு தயாராக உள்ளது. தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வு குறித்து பேசுவோம்.

ஆனால், அவர்கள் தற்போது சில விடயங்களிற்கே ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்“ என்றார்.

கிளிநொச்சியில் கடந்த 2 வாரங்களாக 22 வரையான தமிழ் இளைஞர்கள் பயங்கரவத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் அவர்கள் கைது செய்யப்படவில்லை. கிளிநொச்சியில் படை முகாம்களிற்கு பக்கத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சந்தேகத்தில் சிலர் கைது செய்யப்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தான செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தெற்கில் பாதாள உலகக்குழுவினர் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். நீங்கள், வடக்கு என்ற அடிப்படையில் இதனை பார்க்க கூடாது“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here