மஹிந்தவிற்கு உதயன் பத்திரிகை மாம்பழம் அனுப்பியதா?: சுவாரஸ்ய பின்னணி!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும், தமிழ் ஊடகவியலாளர்களிற்குமிடையில் இன்று காலை சந்திப்பொன்று நடந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களை அடிக்கடி அழைத்து அப்படி சந்திப்பது வழக்கம். அப்படியான- கிரமமான சந்திப்பு இது.

வழக்கமான சந்திப்புத்தான் இது. இந்த சந்திப்பில் மஹிந்த விசேடமாக எதையும் சொல்லவில்லை. ஆனால், இன்றைய சந்திப்பில் ஸ்பெஷல் மாம்பழம்.

உதயன் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் பிரபா ஒரு கூடை மாம்பழத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கும் புகைப்படம் ஒன்றையும், சந்திப்பு தொடர்பாக செய்தியுடன் பிரதமரின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்தது.

தற்போது சமூக ஊடகங்களில் இந்த விடயம் வைரலாகி விட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சரவணபவனின் பத்திரிகையான உதயனின் பொறுப்பாசிரியர் மஹிந்தவிற்கு மாம்பழம் கொடுப்பதா என பலரும் பொங்கியெழுந்து வருகிறார்கள்.

இது தேர்தல் காலம் வேறு. வரலாற்றிலேயே தமிழ் அரசியலரங்கிலேயே இம்முறைதான் கட்சிகளிற்கிடையிலான மோதல் குறைந்த தேர்தலாக இது உள்ளது. அதற்கு காரணம், இம்முறை கட்சி மோதலாக அல்லாமல், தமிழ் அரசு கட்சிக்குள்ளான மோதலாக தேர்தல் களம் மாறிவிட்டது.

இப்படி பல காரணங்களால் உதயனின் மாம்பழம் பிரபலமாகி விட்டது.

உண்மையில் என்ன நடந்தது?

கட்சிகளோ, ஊடகங்களோ ஒரு அரசியல் தரப்பை செய்திகளில் எதிர்த்தால், அந்த தரப்பை காணும் போதெல்லாம் மல்லுக்கட்டுவார்கள் என்று அல்ல. அது நாகரிகமுமல்ல. அப்படியான உபசரிப்பா அல்லது டீலா என்னவாக இருக்குமென ஆராய்ந்ததில் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் ஊடகப்பிரிவில் பணியாற்றும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஒருவர், உதயன் நிறுவனத்துடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதிகார மையங்களில் இப்படி ஒருவரையோ, சிலரையோ வளைத்து வைப்பது ஊடகவியலாளர்களின், ஊடகங்களின் வழக்கம். செய்திகளை கறப்பதற்கான உத்தி அது.

உதயன் அப்படியாக ஒருவரை பிரதமர் அலுவலகத்தில் வைத்திருந்துள்ளது. உதயனின் நீண்டகால பொறுப்பாசிரியராக இருந்தவர் பிரேம். அவர் ஏதோ ஒரு முரண்பாட்டில் உதயனை விட்டு வெளியேறினார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற போர்முலாவிலோ என்னவோ, காலைக்கதிரில் சில மாலை இதழ்களில் பணியாற்றியதாக தகவல்.

பத்திரிகையின் புதிய பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்ட பிரபாவிற்கு, இதுதான் முதலாவது பிரதமர் இல்ல சந்திப்பாக இருந்திருக்கலாம். யாழ்ப்பாணத்திலிருந்து வரும்போது என்ன கொண்டு வருவதென, பிரதமர் இல்ல ஊடக தொடர்பாளரிடம் கேட்டிருக்கிறார். மாம்பழம் கொண்டு வருமாறு அவர் கூற, இங்கிருந்து ஒரு கூடை மாம்பழத்துடன் புறப்பட்டுள்ளார்கள்.

பிரதமர் இல்லத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே, அந்த ஊடகத் தொடர்பாளர் வெளியில் வந்து மாம்பழ கூடையை வாங்கிச் சென்று விட்டார்.

பின்னர், பிரதமரின் கலந்துரையாடல் ஆரம்பித்தபோது, மாம்பழம் வெட்டி சாப்பிடுவதற்காக பிரதமரிடம் பரிமாறப்பட்டுள்ளத. அத்துடன், பிரதமர் இல்லத்திற்கு வெளியில் வழங்கப்பட்ட கூடை, மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. அந்த கூடையை பிரதமரிடம் வழங்குமாறு அந்த ஊடக தொடர்பாளர் பிரபாவிடம் கேட்டுள்ளார். பிரபா அதை மறுக்க, பிரதமரிற்கு அருகில் சென்ற அந்த ஊடகத் தொடர்பாளர், “இப்பொழுது மாம்பழம் வழங்கப்படும்“ என அறிவித்துள்ளார்.

வேறு வழியின்றி உதயன் பொறுப்பாசிரியர் மாம்பழ கூடையை பிரதமரிடம் வழங்கியுள்ளார்.

பிரதமருக்கு மாம்பழ கூடை வழங்குவது அவ்வளவு பெரிய பிரச்சனையா என்று யாரும் யோசிக்கலாம். தமிழ் அரசியல் கலாச்சாரம் அப்படி. அந்த கலாச்சாரத்தை வளர்த்தத்தில் உதயனிற்கும் பங்குண்டு. அது பூமராங்காக உதயன் பக்கமே இப்பொழுது திரும்பி நிற்பதுதான் சுவாரஸ்யம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here