2004 தேர்தல் சட்டவிரோதமானது; வரலாறு என்னை விடுவித்துள்ளது; சிறிதரனின் சாட்சியத்தின் அடிப்படையில் சட்டநடவடிக்கை: ஆனந்தசங்கரி அதிரடி அறிவிப்பு!

2004 நாடாளுமன்ற தேர்தலில் சட்டவிரோதமாகவே வடக்கு கிழக்கில் எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதை இதுவரை நான் சொல்லி வந்தாலும், நிரூபிக்க போதுமான ஆதாரம் இருக்கவில்லை. இப்பொழுது சிறிதரன் 75 கள்ள வாக்கிட்டதாக பகிரங்கமாக சாட்சி சொன்னதன் மூலம், இந்த விவகாரத்தில் சட்டநடவடிக்கை எடுக்கும் சாட்சியமும், துணிவும் எனக்கு கிடைத்துள்ளது என அதிரடியாக அறிவித்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.அனந்சங்கரி.

இன்று தமிழ்பக்கத்திடம் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2004ஆம் ஆண்டு தேர்தலில் நான் தோற்று விட்டேன் என்பதுதான் ஊர் முழுக்க கதை. லண்டன், கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் போனவர்கள் எல்லோரும், கட்டுக்காசை இழந்தவன், உனக்கென்ன அரசியல் என நையாண்டி செய்தார்கள். அவர்கள் இங்கு கட்டுக்காசை இழந்த பின்னர்தான் வெளிநாடு போனார்கள். அவர்கள் எப்படி போனார்கள் என்பது எனக்குத் தெரியும். அது வேறு கதை.

2004 தேர்தலில் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. வாக்களிக்க விடவில்லை. பிரச்சாரம் செய்ய விடவில்லை. எனது கட்சி வேட்பாளர்களையும் வாக்களிக்க விடவில்லை. வீடுகளிற்கு சென்று பிரச்சாரம் செய்ய விடவில்லை.

ரவிராஜ் தலைமையிலும் இது நடந்தது. ரவிராஜ் நான் போட்ட வேட்பாளர் அவர் கூட அப்படித்தான் நடந்தார்.

அப்பொழுது நியாயமற்ற தேர்தல் நடந்ததாக நான் சொல்லி வந்தேன். அதற்கு சாட்சியிருக்கவில்லை. இப்பொழுது சிறீதரன் தனது வாயால் அதற்கு சாட்சி சொல்லியுள்ளார்.

சிறிதரன் 75 வாக்கு போட்டதாக சொல்கிறார். அவரைப் போல எத்தனை பேர் கள்ள வாக்களித்திருப்பார்கள்.

விடுதலைப் புலிகள் சார்பில் இந்த நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்கிறேன் என்று கூறியிருந்தார். விடுதலைப் புலிகள் கொடுத்த விஞ்ஞாபனத்தை, இந்த சட்டத்தரணி சம்பந்தன் அச்சிட்டு விநியோகித்தார். தேர்தலின் பின்னர், வடக்கு கிழக்கு மக்கள் எம்மை மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுத்து வெல்ல வைத்துள்ளனர் என அறிக்கை விட்டார்.

இது ஒரு படுபொய் என்பது இப்பொழுது நிரூபணமாகியுள்ளது. இந்த மோசமான தேர்தல் நடவடிக்கை நாட்டை எவ்வளவு பாதிக்கும் என்பதை சம்பந்தன் யோசிக்கவில்லை, தேசத்துரோக குற்றச்சாட்டிற்கு ஆளாவேன் என்பதை யோசிக்கவில்லை.

அந்த ஐந்து வருடமும் எம்.பியாக இருந்தவர்கள் மோசடியாக எம்.பியானவர்கள். சம்பந்தனும், அவரோடு சேர்ந்தவர்களும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதுவரை எனக்கு ஆதாரம் இருக்கவில்லை. இப்பொழுது சிறிதரன் மூலம் ஆதாரம் கிடைத்துள்ளது. அவரது தகவல் எனக்கு தைரியத்தை தந்துள்ளது. இனி சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here