மட்டக்களப்பு மாவட்ட நெல் அறுவடை விழா கிரான் பூலாக்காட்டில்

சிறுபோக நெல் அறுவடை மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிளிலும் தற்பொழுது சிறப்பாக இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் வழங்கிய உரமானியம் மற்றும் உள்ளீடுகளைக் கொண்டு உற்பத்தி செய்த நெல் உற்பத்தி இவ்வருடம் திருப்திகரமான விளைச்சலை தந்திருப்பதாக மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதற்கிணங்க விவசாய அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலில் இம் மாவட்ட நெல் அறுவடையினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் மாவட்ட அரச நெல் அறுவடை விழா இன்று (30) கிரான் கமநலச் சேவைப் பிரிவின் முள்ளிப்பொத்தானை கண்டத்தின் பூலாக்காடு பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கி. ஜெகநாத் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, கமநல அபிவிருத்தி திணைக்கள ஆனையாளர் நாயகம் டபிள்யு. எம். எம். பி. வீரசேகரவும் கலந்து கொண்டு சமய அனுஸ்டானங்களுடன் இந்து மக்களின் பாரம்பரிய முறைப்படி அறுவடையினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்த வைத்தனர்.

இந் நிகழ்வில் ஏழை விவசாய குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளும் ஏழை விவசாயிகளின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டன. இங்கு பணிப்பாளர் நாயகம் டபிள்யு. எம். எம். பி. வீரசேகர சிறப்புரையாற்றுகையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயத்துறையினூடாக பெரும் பங்காற்றிவரும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்திக்கென கூடிய ஒதுக்கீடுகளை எமது திணைக்களம் ஒதுக்கீடு செய்யவுள்ளது. இன்று விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ள நீர்பாசன அணைக்கட்டு பிரச்சினைகள் அனைத்தும் அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும்.

அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்து வழங்குகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட அறுவடை விழாவில் கமநல சேவை ஆணையாளர் நாயகம் கலந்து சிறப்பிப்பது பாராட்டத்தக்கது. இதன்மூலம் எதிர்காலத்தில் இம்மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக்கு கூடுதலான வளர்ச்சியை எதிர் பார்க்கலாம் எனக்குறிப்பிட்டார்.

இந்த விசேட நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் ஏ.எச்.எம்.எல். அபேரத்ன, மட்டக்களப்பு பிராந்திய பிரதி மாகாண நீப்பாசணப் பணிப்பாளர் திரு.வே. இராஜகோபாலசிங்கம், மட்டக்களப்பு பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு.வி. பேரின்பராஜா உட்பட விவசாய நீர்ப்பாசண திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here