தேர்தல் கலகலப்பு 6: சொகுசு கட்டிடத்தை திறக்க மட்டக்களப்பு செல்கிறார் சம்பந்தன்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் ஒருவரினால் பல கோடி ரூபா செலவில் கட்டப்பட்டுள்ள சொகுசு கட்டிட தொகுதியை திறந்து வைக்க, தள்ளாத வயதிலும் திருகோணமலையிலிருந்து பறக்கவுள்ளார் இரா.சம்பந்தன்.

எதிர்வரும் 12ஆம் திகதி இந்த திறப்பு விழா நடக்கவுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினராக இருப்பதற்கும், அதில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததற்கும், வேட்பாளராக இருந்ததற்கும்- ஒருவர் பெருமைப்பட்டு கொள்ளலாம் என ஒரு காலமிருந்தது. இப்பொழுது அப்படியல்ல.

இருக்கின்ற தமிழ் கட்சிகளிலேயே மிக மோசமான வழிகளில் வேட்பாளராகலாம் என்ற நடைமுறைகள் இன்று இலங்கை தமிழ் அரசு கட்சியில் மட்டும்தான் உள்ளது. ஏனைய கட்சிகளில் வேட்பாளராக ஒருவர் விண்ணப்பிக்கும் போது, கட்சியின் மற்றைய அங்கத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்ற தயக்கம், கட்சியின் தலைமையிடம் இருக்கும்.

தமிழ் அரசு கட்சியின் தலைமையிடம் மட்டும்தான் தற்போது அப்படியான உணர்வெதுவும் இல்லாமல்,வேட்பாளர் நியமனம் வழங்குகிறார்கள். இதை சொன்னால் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் பலருக்கு மூக்கின் மேல் கோபம் வருமென்பது தெரியும்.

ஆனால், நிதானமாக யோசித்துப் பாருங்கள்… பிரியாணி பார்சல் வாங்கிக் கொடுத்தே ஒருவர் வேட்பாளராகிறார் என்று, ஊரெல்லாம் நையாண்டி செய்கிறார்கள் என்றால், அதன் பின்னால் எவ்வளவு சீத்துவக் கேடு உள்ளது.

அம்பாறையில் கோடீஸ்வரன், மட்டக்களப்பில் சிங்கள வேட்பாளர் சாணாக்கிய ராகுல் வீரபுத்திரன் போன்றவர்கள் வேட்பாளரானதன் பின்னால் உள்ள சூட்சுமங்கள், சிதம்பர சக்கரமல்ல. வங்கி அதிகாரிகளிடம் கேட்டீர்களென்றால் விடயம் வெளிச்சத்திற்கு வரும்.

கடந்த சில வருடங்கள் வரை சாணாக்கியன் மஹிந்த முகாமில் இருந்தவர். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக சில மாதங்கள் முன்னர் வரை செயற்பட்டவர். அவரது தாத்தா தமிழ் அரசு கட்சி பிரமுகர் என்ற ஒரே காரணத்திற்காக சாணாக்கியனை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் ஆக்கினார்கள் என்றால்…பாட்டன் பூட்டனின் செயற்பாட்ட வரலாற்றை கொண்டிராமல், தனது சொந்த செயற்பாட்டு வரலாற்றை கொண்ட கருணா அம்மானை கட்சியின் வேட்பாளராக்க ஆயிரம் மடங்கு நியாயமுள்ளதல்லவா!

ஆனால், இந்த இடத்தில்தான் “பிரியாணி அரசியல்“ வேலை செய்தது. தமிழ் அரசு கட்சியின் தலைவர்கள் மட்டக்களப்பிற்கு செல்லும் போது, அவர்களை தனது நட்சத்திர ஹொட்டலில் தங்க வைப்பது, விருந்தளிப்பது என “கன்னா பின்னாவென“ உச்சிகுளிர வைத்து… (இன்னும் என்னனென்னத்தை குளிர வைத்தாரோ..) வேட்பாளராகி விட்டார்.

தமிழ் அரசு கட்சியின் 3 பிரமுகர்களின் தேர்தல் செலவிற்கு அவர் கொடையளித்ததாகவும் அரசல் புரசலாக அரசியல் வட்டாரத்தில் ஒரு தகவலுண்டு.

சாணக்கியன் ராகுல் வீரபுத்திரன் சில, பல கோடி ரூபா செலவில் ஒரு உல்லாச கட்டிட தொகுதியை கட்டி வருகிறார். இராசமாணிக்கம் வாழ்ந்த பழைய வீட்டை, பல அடுக்கு கட்டிட தொகுதியாக மாற்றியுள்ளனர். சொகுசுஅறைகள், நீச்சல் தடாகம், மண்டபம் என பல கோடி ரூபா செலவில், வர்த்தக நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள கட்டட தொகுதி. பெயர் மட்டும், அரசியலுக்கு பயன்படும் விதமாக- இராசமாணிக்கத்தின் பெயருடன் அமைந்துள்ளது.

இந்த கட்டிடத்தை தேர்தலின் முன்னர் திறந்து, மக்களை கூட்டி, தேர்தலில் ஆதாயம் ஈட்டலாமென்பது சாணக்கியனின் கணக்கு.

இதற்காக இரவு, பகலாக துரிதகதியில் கட்டிட வேலைகள் நடந்து வருகிறது. ஜூலை 12ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா நிச்சயிக்கப்பட்டுள்ளது. சொகுசு கட்டிடடத்தை திறக்க சம்பந்தன் திருகோணமலையிலிருந்து வருகிறார்.

சொகுசு கட்டிட திறப்பு விழாவிற்கு வரும்போதே, மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் சம்பந்தன் முடித்து விட திட்டமிடுவதாகவும், 12ம் திகதியை மையப்படுத்தி மட்டக்களப்பில் தேர்தல் பரப்புரைகளை திட்டமிடும்படி, கட்சியின் செயலாளரிற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல். சம்பந்தரின் உத்தரவையடுத்து, தமக்கு அதற்கான உத்தரவை கட்சி செயலாளர் இட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இப்பொழுது இளைஞர்கள் அநியாயங்களையும், மோசமாக அரசியல் கலாச்சாரத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. தன்னை இதுவரை அடையாளம் காண்பிக்காமல் நம்முடன் பேசி வந்த அவர், அண்மையில் அவரது உரையாடலொன்றை சிலர் இணையத்தில் பகிரங்கப்படுத்திய பின்னர், இப்பொழுது துணிந்து பேசத் தொடங்கியுள்ளார். அது வரவேற்கத்தக்கது. அவரைப் போல ஏனைய இளையவர்களும், அநியாயத்தை தட்டிக்கேட்கும் துணிவை பெற்றால், கட்சிக்குள் மாற்றத்தை உருவாக்கலாம்.

12ஆம் திகதி திறப்பு விழா. அதற்குள் திடீரென ஒரு சிக்கல் உருவாகி விட்டது. சாணக்கியனின் சொந்த மாமனார் ஒருவர் அவுஸ்திரேலியாவில் காலமாகி விட்டார். ஜூலை 6ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இறுதிச்சடங்கு இடம்பெறும். இந்த இறுதிச்சடங்கு சாணக்கியனின் வீட்டில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது. இதற்கு 6 நாள் கழித்து- ஜூலை 12- மருமகனார் கோலாகலமாக சொகுசு கட்டிட தொகுதியை திறக்கிறார்.

உள்ளூர் மக்கள் சிலர் இதை சாணக்கியன் தரப்பிற்கு சுட்டிக்காட்டியுள்ளனர். “மெதடிஷ்த கிறிஸ்தவத்தை பின்பற்றும் சாணக்கியன், இந்து மத சடங்குகளை கடைப்பிடிப்பதில்லை, நம்புவதில்லை. இது தேர்தல் நேரம். தேர்தலின் முன்னர் கட்டிடத்தை திறந்தால்தான், மக்களை கூட்ட முடியும்“ என அவரது தரப்பிலிருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.

பதவி ஒரு மனிதனை எந்தளவிற்கு பாடாய் படுத்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கடந்த பொங்கல் விழாவை மட்டக்களப்பில் தமிழரசு கட்சி ஏற்பாடு செய்தது. இரா.சம்பந்தன் பிரதம விருந்தினர். பெருமெடுப்பில் பிரச்சாரம் செய்து, அழைப்பிதழ் அடிக்கப்பட்டது. நிகழ்விலன்று ஆராத்தியெடுக்கவும் பெண்கள் தயாராக இருந்தார். கடைசி வரை சம்பந்தன் வரவில்லை. நிகழ்வு நேரம் கடந்த பின்னர், சம்பந்தன் வரமாட்டார் என்ற தகவல் அனுப்பப்பட்டது.

இப்படியான நிகழ்வொன்றிற்கு வராத இரா.சம்பந்தன் தனியொரு வேட்பாளரின் சொகுசு கட்டிட திறப்பு விழாவிற்கு வருகிறார்.

இந்த விமர்சனம் வருமென்பதை முன்னரே தெரிந்ததான், அதே நாட்களில் தேர்தல் பிரச்சார கூட்டங்களையும் ஏற்பாடு செய்யுமாறு செயலாளரிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here