இறக்குமதி செய்ய நான் மாடா?; கருப்பையா கங்காணியின் பேரன்: ஜீவன்!

என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக பலர் கூவி திரிகின்றனர். இறக்குமதி செய்ய நான் என்ன மாடா. என்னை அப்படி சொல்பவர்களுக்கு நான் ஒன்று சொல்கின்றேன். நான் மலையகத்தை சேர்ந்த ஒரு இளைஞன். நான் கருப்பையா கங்காணியின் கொள்ளுப் பேரன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை நகரில் நேற்று (28) நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் சிலர் நம்மிடையே பிரிவினையை ஏற்ப்படுத்த முனைகின்றனர். நான் பதவிக்காக ஆசைப்படுபவன் இல்லை. பதவிகள் நம்மை தேடி வர வேண்டும். பதவிகளை தேடி நாம் போக கூடாது. 5 வருடங்கள் எதிர்கட்சியிலே இருந்து கொண்டு மலையகத்தை ஆட்டிப்படைத்தோம். அப்போது அமைச்சர்களாக இருந்தவர்கள் அமரர் ஆறுமுகன் தொண்டமானை கண்டு பயந்து நடுங்கினார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒர் ஆலமரம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு அழகான குடும்பம். புதிய சட்டம் ஒன்றை இங்கு இயற்றியுள்ளோம். இனிமேல் காங்கிரஸ் என்ற குடும்பத்திலிருந்து யாராவது பிரிந்து சென்றால் அவரை காங்கிரஸ் கைகழுவும். மீண்டும் சேர்த்துக்கொள்ளாது. எல்லோரும் வந்துபோக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பஸ் தரிப்பிடம் அல்ல. இது ஒரு ஆலமாரம்.

எனது தந்தை உயிருடன் இருக்கும்போதும் சிலர் அவர் பெயரை சொல்லியே அரசியல் நடத்தினார்கள். ஒரு நாள் தோட்ட கமிட்டி தலைவர் ஒருவர் என் தந்தையிடம் உரையாடும்போது கூறினார். ஐயா உங்களை விமர்ச்சித்தே பலர் மலையகத்தில் அரசியல் நடத்துகின்றார்கள் என, அதற்கு எனது தந்தை அமரர் ஆறுமுகன் தொண்டான் சொன்னார். நான் செத்தாலும் என் பெயரை சொல்லியே அரசியல் நடத்துவார்கள் அவர்களுக்கு அவ்வளவுதான் அறிவு இருக்கின்றது என்று சொன்னார். அது இன்று நடந்துக்கொண்டு இருக்கின்றது.

அரசியல் நாகரீகம் தெரியாதவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் வந்து அரசியல் நாகரீகத்தை கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு அரசியல் நாகரீகம் கற்றுத் தருகின்றோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here