ஆப்கானில் அமெரிக்க இராணுவத்தை கொல்ல தலீபான்களிற்கு இரகசிய நிதியளித்ததா ரஷ்யா?


ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களை கொல்வதற்காக, தலீபான் பயங்கரவாத இயக்கத்திற்கு ரஷ்யா பணம் வழங்கியதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே 19ம் ஆண்டுகளாக ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிறது. இதற்காக அங்கு அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தியுள்ளது. இதேபோல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் அங்கு முகாமிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் நேட்டோ படை வீரர்களை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வந்தனர்

இந்த தாக்குதல்களில் 2,500க்கும் அதிகமான அமெரிக்க இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக நீண்ட காலமாக முடிவில்லாமல் நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு அமெரிக்கா முயற்சிகளை எடுத்தது.

இதன் பலனாக கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு வீரர்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்களை கொலை செய்ய தலீபான் பயங்கரவாதிகளுக்கு ரஷ்யா பண உதவி செய்வதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மார்ச் மாதமே ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் பேச இருந்ததாகவும் ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என குழப்பம் ஏற்பட்டதால் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாகி வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என ரஷ்யா தெரிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்த நாங்கள் தயாரித்த ஆயுதங்களையே பயன்படுத்துவதாக தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்க ஊடகங்களில் ரஷ்யா மீது குற்றம் சாட்டி வெளிவந்துள்ள செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. இது கண்டனத்துக்குரியது. இந்த செய்தியில் காரணமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள ரஷ்ய தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலீபான் பயங்கரவாத அமைப்பும் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்றது என கூறி மறுத்துள்ளது.

இது தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் சபிபுல்லா முஜஹித் கூறுகையில் “எங்கள் இலக்குகள் மற்றும் படுகொலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்து கொண்டிருந்தன நாங்களாக அதை சொந்தமாக செய்தோம். அதுமட்டுமின்றி பெப்ரவரி மாதம் அமெரிக்க அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது அமெரிக்கா மற்றும் நேட்டோ படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தி விட்டோம்“ எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here