கைப்பற்றப்பட்ட 100 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை, விற்பனை செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிசார்!

போதைப்பொருள் கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரியொருவரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பை பேணிய, போதைபபொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 4 பொலிஸ் அதிகாரிகள் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் வீட்டிலிருந்தே இந்த வாகனம் மீட்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனையின் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துச் செல்ல இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டது.

மினுவாங்கொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், மோட்டார் சைக்கிள் ஒன்று, 940,000 ரூபா பணம், நான்கு கிரெடிட் கார்டுகள், ஜி.பி.எஸ் இயந்திரம், செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் சிம் கார்ட் கொண்ட மொபைல் போன் ஆகியவற்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

முன்னதாக, போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் 4 பொலிசாரும், ஒரு வெளி நபரும் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த இரு வருடங்களுக்கு முதல் மினுவங்கொட பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் மஹேஸ் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையொன்றின் போது ஐந்து கிராம் ஹெரோயினுடன் டையில் சமிந்த எனப்படும் சமிந்த தயா பிரியான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது ரிபிட்டர் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் திவுலப்பிட்டிய பகுதி தனியார் வங்கியொன்றினூடாக இலட்சக்கணக்கான பணம் பரிமாற்றப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சுற்றிவளைப்பு பிரிவு குழுவொன்றின் பிரதானி, விசாரணை என்ற பெயரில் டையில் சமிந்தவை சந்திக்க மினுவங்கொடை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

இதன்போது ‘உனக்கு 100 கிலோ ஹெரோயின் வெள்ளை நிற வாகனம் ஒன்றில் வந்துள்ளததே. அந்த பொருள் எங்கே? ‘என டையில் சமிந்தவிடம் விசாரித்துள்ளார். இதன்போது டையில் சமிந்த ஆச்சரியத்துடன் ‘அன்று சேரின் குழுவினர்தானே பொருட்களை கொண்டு வந்தீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

அந்த கேள்வியை எதிர்பாராத போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி, சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யாது பொலிஸார் இரு நாட்கள் தடுத்து வைத்துள்ளதாக பதிவொன்றினையிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு பொலிஸ் குழு மினுவங்கொட பொலிஸ் நிலையத்துக்குச் சென்று டையில் சமிந்தவுடன் விசாரணைகள் நடத்தியுள்ளது. இதன்போது டையில் சமிந்தவின் தொலைபேசியை கையேற்று நடாத்திய விசாரணைகளில் நீர் கொழும்பு பகுதியில் வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 6 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் அவரது சகோதரரின் வீடொன்றில் பெருமளவு போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. அவ்வீட்டை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு குழு சுற்றிவளைத்த போது, போதைபபொருள் இருக்கவில்லை.

வாகனம் ஒன்றில் வந்த மூவர், போதைப்பொருளை எடுத்துச் சென்றுவிட்டதாக வீட்டிலிருந்தவர்கள் கூறியுள்ளனர். பின்னர் சி.சி.ரி.வி. காணொளிகள் பிரகாரம் வாகன இலக்கத்தை அடையாளம் கண்டு விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.

லெகன் ஆர் ரக வாகனம் இதற்கு பயன்படுத்தப்பட்டதும், அது வத்தளை பகுதியில் உள்ள வாடகைக்கு வாகனங்களை கையளிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

அங்கு சென்று விசாரணை செய்த போது, ஒரு இலட்சம் ரூபா மாத வாடகை அடிப்படையில், அந்த வாகனத்தை மினுவங்கொட பொலிஸ் நிலையத்துக்கு டையில் சமிந்தவை சந்திக்கச் சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சுற்றிவளைப்பு பிரிவொன்றின் பிரதானியால் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தென்மாகாணத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சுமார் நூறு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை, போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடமே மீள விற்பனை செய்யப்பட்ட தகவல் வெளியானது.

தற்போது டுபாயிலுள்ள போதைப் பொருள் வர்த்தகரான கிஹான் பொன்சேகா எனும் (மாக்கந்துர மதுஷின் சகா)  நபருக்கும், போதைப் பொருள் தடுப்பு பிரிவின் ஒரு குழுவால் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் போதைப் பொருளுக்கும் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் குழு டையில் சமிந்தவுக்கு ஒரு தொகை போதைப் பொருளை கிஹான் பொன்சேக்காவின் ஆலாசனைக்கமைய பொல்வத்தை பகுதியில் வைத்து கையளித்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்தே, 4 பொலிசார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here