புலிகளைப் பற்றி நாம் பேசுவோம்… அது எமது உரிமை: செல்வம்!

சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றேன் என்ற மமதையில் இருக்கின்ற ஜனாதிபதி எமது தேசத்திலே தனது கரங்களை நீட்டி செயற்படக்கூடிய சந்தர்ப்பத்தை தமிழ்மக்கள் உருவாக்ககூடாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி சிங்கள தேசத்தின் மீது நம்பிக்கை வைத்ததன் காரணமாக எங்களுடைய தேசத்தில் பரிசோதனை முகாம்களும் சோதனைசாவடிகளும் முளைத்திருக்கின்றது. மணல் ஏற்றினால் கூட சுட்டுக் கொல்லக்கூடிய வல்லமை அவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

சாதாரண பொதுமகன் என்ன செய்தாலும் சுட முடியும் என்ற அதிகாரத்தை ஐனாதிபதி முப்படைக்கும் வழங்கி எமது மக்களை நசுக்கும் செயற்பாட்டை செய்து வருகின்றார்.

அதனைத் தட்டிக் கேட்பதற்கு கூட்டமைப்பால் மாத்திரமே முடியும். அதற்கு பல வரலாற்று சான்றுகள் இருக்கிறது. எனவே கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கு நாம் எத்தனிக்க கூடாது. அரசாங்கத்துடன் வால் பிடிப்பவர்களை நீங்கள் தெரிவு செய்ய வேண்டாம்.

இன்று கொள்கை இல்லாத சுயேட்சை குழுக்கள் வன்னி மண்ணிலே அதிகம் நிறுத்தப்படிருக்கிறது என்றால் நாம் சிந்திக்க வேண்டும். கோட்டாபயவின் சிந்தனையே கொள்கை இல்லாதவர்களை நிறுத்தி இருக்கிறது.

பிரதமர் மகிந்த சொல்கிறார் தமிழ் பிரதேசம் என்று எங்குமே இல்லை. இலங்கையில் யாரும் எங்கும் வாழலாம் என்கிறார். அதற்காகவே கூட்டமைப்பை பலவீனப்படுத்தி சிங்கள உறுப்பினர் ஒருவரை கொண்டு வருவதற்காக கொள்கை இல்லாத சுயேட்சை குழுக்களை வன்னியில் களம் இறக்கியிருக்கின்றனர். தமிழர்களின் பூர்வீகத்தை உடைப்பதற்காக இந்த செயற்பாடு மேற்கொள்ளபடுகின்றது.

எனவே சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றேன் என்ற மமதையில் இருக்கின்ற ஜனாதிபதி எமது தேசத்திலே தனது கரங்களை நீட்டி செயற்படக்கூடிய சந்தர்ப்பத்தை தமிழ்மக்கள் உருவாக்ககூடாது

இதேவேளை கூட்டமைப்பில் இருக்கின்ற புல்லுருவிகளை மக்கள் இனம் கண்டு புறம்தள்ள வேண்டும். களத்தை உருவாக்கிய விடுதலைப்புலிகள் தொடர்பாக மோசமான வார்த்தைகளை வெளியிலே சொன்ன சுமந்திரன் போன்றவர்களை என்னால் ஏற்றுகொள்ள முடியாது.

நாம் தேர்தல்காலங்களிலேயே விடுதலைப்புலிகள் பற்றி பேசுவதாக சிலர் சொல்கிறார்கள். பேசுவோம். அது எமது உரிமை. வரலாற்றை சொல்வதிலே நாம் தயங்கப் போவதில்லை. அதை எப்போதும் எங்கேயும் சொல்லுவோம் என்றார்

அலுவலக திறப்புவிழா நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், பிரதேச சபை தவிசாளர் து.நடராயசிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here