கிளிநொச்சி குடிநீர் ஆதாரத்துடன் கலக்கும் வைத்தியசாலை கழிவு நீர்!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கழிவு நீரானது வைத்தியசாலைக்கு வெளியே விடப்படுவதனால் இது தங்களது குடிநீர் நிலைகளை மாசுப்படுத்துவதோடு, துர்நாற்றமும் ஏற்படுகிறது என வைத்தியசாலை சூழலில் வசிக்கன்ற பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டு ஆறுக்குள் விடப்பட்டு வருகிறது. இந்த நீரானது ரை ஆறு ஊடாக கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது. கிளிநொச்சி குளத்திலிருந்தே கிளிநொச்சிக்கான குடிநீருக்கு நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் வைத்தியசாலையிருந்து வெளியேறுகின்ற கழிவு நீரில் வைத்தியாசாலையின் இராசயனங்கள் அடங்கியிருக்கலாம். எனவே அவற்றை சுத்திகரிக்கின்ற வசதிகள் கிளிநொச்சி குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் காணப்படுகிறதா? அங்கிருந்து குழாய் வழியாக விநியோகிக்கப்படும் நீரை தாம் குடிநீராக பயன்படுத்தலாமா என்பதனை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை வைத்தியசாலையின் அயலில் உள்ள மக்கள் “கடந்த சிலமாதங்களாக வைத்தியசாலைக் கழிவு நீரானது தமது குடிநீர் ஆதாரங்களை மாசடையச் செய்வதாகவும் அதிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் அயலில் வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது என முறையிட்டும் இதுவரை அதனை நிவர்த்தி செய்வதற்கு எதுவித நடவடிக்கையும் நிர்வாகத்தினால் எடுக்கப்படவில்லை” எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் ராகுலனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது வைத்தியசாலையின் நீர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையான இயங்கவில்லை. எனவே இது தொடர்பில் நாம் உடனடி நடவடிக்கைக்கு மாகாண பணிப்பாளருக்கு அறிவித்திருகின்றோம். தற்போது கூறுவிலை கோரல் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த அவர் வைத்தியசாலையின் நீர் வைத்தியசாலைக்கு வெளியே செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆனால் நாம் மக்களுடன் நேரடியாக குறித்த பகுதிக்கு பிரதேச மக்களுடன் சென்று பார்வையிட்ட போது வைத்தியசாலைக்குள் இருந்து கழிவு நீரானது வெளியேறிக் கொண்டிப்பதனை அவதானிக்க முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here