ஓட்டமாவடிக்கு கொண்டு வருவதற்கு மரங்களை கடத்திய கும்பல் கைது

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ளாமைச்சேனை பகுதியில் இருந்து ஓட்டமாவடி பிரதேசத்திற்கு கொண்டு வருவதற்கு தயாரான நிலையில் இருந்த ஒரு தொகை மரங்களை வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றி ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாகரை காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மரங்கள் கடத்தல் இடம்பெறுவதாக வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தவகவலையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ளாமைச்சேனை பகுதியில் அதிரடிப்படையினர் சுற்றிவலைப்பினை மேற்கொண்டனர்.

இதன்போது முதுரை, தேக்கை, கல்ஓதிய, கட்டாக்காலை ஆகிய முப்பத்தி நான்கு (34) மரங்களையும், நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதுடன், சட்டவிரோத மரங்கள் ஏற்றி வந்த எல்ப் ரக வாகனமும், ஒரு மோட்டார் சைக்கிளும், கோடாரி, கத்தி என்பனவும் கைப்பற்றப்பட்டு வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையின் அலுவலக அதிகாரி டபிள்யூ.ஏ.எஸ்.பிரேமரத்ன தெரிவித்தார்.

தென்னை ஓலையினால் மறைத்து வைக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் ஓட்டமாவடி பிரதேசத்திற்கு கொண்டு வருவதற்கு தயாரான நிலையில் இருந்த வெட்டப்பட்ட மரங்கள், வாகனம் மற்றும் நான்கு சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை விஷேட அதிரடிப்படை முகாமிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.சேனாதீர மற்றும் விசேட அதிரடிப்படையின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டி.பத்துசிறி ஆகியோரின் வழிகாட்டலில் வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here