மஹிந்தவின் பெயரைச்சொல்லி சுத்தம் செய்வதற்காக பாரதியார் சிலையில் சுவரொட்டி ஒட்டிய சுவாரஸ்யம்: மாதனமுத்தாக்களாக மாறிய யாழ் மொட்டுக்கட்சிக்காரர்கள்!

யாழிலுள்ள பாரதியார் சிலையை சுத்தம் செய்யுமாறு மஹிந்த ராஜபக்ச அதிரடி உத்தரவு என ஒரு செய்தி உலாவி வருகிறது. அதை மொட்டு ஆதரவாளர்களும், நுனிப்புல் மேய்பவர்களும் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த செய்தி போலியானது.

அது மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களாலும், மஹிந்த ராஜபக்ச ஆதரவு ஊடகங்களாலும் பரப்பப்படும் போலிச் செய்தி. பொதுத்தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், மஹிந்தவை ஒரு நடுநிலையாளன்- அனைத்து இனங்களிற்காகவும் பொதுவானவராக காண்பிக்கும், யாழ்ப்பாணத்திலுள்ள மொட்டுக் கட்சிக்காரர்களின் சில்லறை உத்தி.

உண்மையில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. இந்த சில்லறை பிரச்சாரத்திற்காக, யாழிலுள்ள மொட்டு வேட்பாளர் ஒருவர் சில்லறைத்தனமாக நடந்து கொண்ட சுவாரஸ்ய தகவலை வெளிப்படுத்துகிறோம்.

யாழ்ப்பாணம் அரசடி சந்தியிலுள்ள பாரதியார் சிலையில் எழுத்துக்களை மறைத்து மொட்டு வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை கடந்த 25ஆம் திகதி ஒட்டியிருந்தனர்.

சிலையின் கோலத்தை புகைப்படமும் எடுத்த யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். மொட்டு வேட்பாளரின் செயலுக்கு எதிராக பரவலான கண்டனங்கள் பகிரப்பட்டது.

அந்த சிலையை பராபமரிப்பது, சிலைக்கு அருகில் குடியிருக்கும் நான்கைந்து இளைஞர்கள். அவர்கள் மறுநாள்- 26ஆம் திகதி- சுவரொட்டிகளை கிழித்து விட்டனர். சிலையையும் சுத்தம் செய்துள்ளனர்.

அப்போது அந்த இடத்திற்கு வந்த மொட்டு வேட்பாளர் அணி, அந்த இளைஞர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளது. நாம் ஒட்டிய சுவரொட்டிகளை நீங்கள் ஏன் கிழித்தீர்கள், அதை நாம் கிழித்து சுத்தம் செய்யவிருந்தோம் என தர்க்கப்பட்டனர். எனினும், இளைஞர்கள் சுவரொட்டிகளை கிழித்து சுத்தம் செய்து விட்டு, வீடு திரும்பி விட்டனர்.

அவர்கள் வீடு திரும்பியதும், மீண்டும் அந்த சிலையில் மொட்டு அணியினர் சுவரொட்களை ஒட்டினர்.

பின்னர் நேற்று-27ஆம் திகதி- மொட்டு அணி வித்தியாசமாக சிந்திக்கிறோம் பேர்வழி என ஒரு ஐடியா போட்டது. வித்தியாசமாக சிந்திப்பதாக அவர்கள் நினைத்தாலும், 2010 முதல் வடக்கில் போட்டியிடும் மஹிந்த தரப்பினர் அனைவருமே செய்வதை போல “மொக்கு ஐடியா“வே போட்டனர்.

நேற்று அங்கு வந்த மொட்டு அணியினர், சுவரொட்டிகளை கிழித்து விட்டு, சிலைக்கு தீந்தை பூசினர். போதாதற்கு, அந்த பகுதியிலிருப்பவர்களிடம், மஹிந்த ராஜபக்சவின் உத்தரவின்படி சிலையை சுத்தம் செய்கிறோம் என “அடித்தும்“ விட்டார்கள்.

இதை நம்பிய தமிழ் இணையங்கள் சில, இந்த செய்தியின் ஆரம்பத்தில் உள்ளதை போல தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர்.

பாரதியார் சிலையை மஹிந்த சுத்தம் செய்ய சொன்னார் என சொல்லியே தேர்தலில் வெற்றிபெறலாமென நினைக்கும் வேட்பாளர்களை கொண்ட, யாழ் மாவட்ட மொட்டுக்கட்சிக்காரர்களை எந்த வகைக்குள் அடக்கலாம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here