யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தெரிவு செய்ய ஓகஸ்ட் 7 இல் கூடுகிறது பேரவை?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி இடம்பெறவிருப்பதாக அறிய வருகிறது.

துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்காகப் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி கூட்டப்படவுள்ளது.

துணைவேந்தர் தெரிவுக்காகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையின் படி கோரப்பட்டதற்கமைய 5 பேர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த ஐந்து பேரது தகுதி, தராதரங்களை மதிப்பீடு செய்து திறமை ஒழுங்கைத் தீர்மானிப்பதற்காக, விண்ணப்பதாரிகளின் விபரங்கள் மதிப்பீட்டுக் குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட, மொரட்டுவ பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தலைமையிலான மூவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவையின் சிபார்சுப்படி, பேரவையினால் நியமிக்கப்பட்ட இருவருமாக 5 பேர் கொண்ட மதிப்பீட்டுக்குழுவே துணைவேந்தர் விண்ணப்பதாரிகளின் தகுதி, தராதரங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்தக் குழுவின் உறுப்பினர்களால் தனித்தனியாக மதிப்பிடப்பட்டு வழங்கப்படும் அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி இடம்பெறும் விசேட பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் அதே நேரத்தில், பேரவை உறுப்பினர்களும் தனித்தனியாக விண்ணப்பதாரிகளைத் தனித்தனியாக மதிப்பிட்டுப் புள்ளிகளை வழங்குவர். மதிப்பீட்டுக்குழு, பேரவை ஆகியவற்றின் மதிப்பீடுகளின் படி – திறமை: முன்னுரிமை அடிப்படையில் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.

அங்கிருந்து பரிந்துரைகளுடன் உயர் கல்வி அமைச்சின் ஊடாக மூன்று பேரில் இருந்து ஒருவரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்வார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here