யாழில் 4 தரப்புக்கு இடும் வாக்கு கோட்டாவிற்கு இடும் வாக்காகும்: கஜதீபன்!

கோட்டாபாய ராஜபக்ச தரப்பினர் யாழில் 4 தரப்புக்களாக போட்டியிடுகிறார்கள். இந்த 4 அணிக்கும் வாக்களிப்பது கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களிப்பதாக அமைந்த விடும். இந்த மண்ணின் போராட்ட வரலாற்றையும், தியாகத்தையும் அறிந்திருந்தால் அவர்கள் தேர்தல் களத்தில் இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் பா.கஜதீபன்.

யாழ்ப்பாணம் அரியாலையில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இருக்கும் அங்கஜன், டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களிற்கு இடப்படும் வாக்குகள் அனைத்தும் கோட்டாபய ராஜபக்சவிற்கு இடப்படும் வாக்குகள்தான். வாசுதேவ நாணயக்காரவின் கட்சியும் போட்டியிடுகிறது. கோட்டாபய ராஜபக்சவின் தரப்பினர் யாழ்ப்பாணத்தில் 4 அணிகளாக போட்டியிடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் 33 அணிகள் போட்டியிடுகின்றன. இதைவிட இன்னும் அதிக அணிகள் வந்தாலும் மக்கள் குழம்ப மாட்டார்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு 22,300 வாக்குகள்தான் கிடைத்தன. அதைத்தான் இந்த 4 தரப்புக்களும் பிரித்துக் கொள்ள வேண்டும்.

தென்னிலங்கையில் கோட்டாபய ராஜபக்ச தரப்பு மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் அசுர பலத்துடன் களத்தில் உள்ளது. எதிர்க்கட்சிகளான சஜித், ரணில் தரப்பு பலவீனமான நிலையில் உள்ளது. இந்த நிலையில், கோட்டாபய தரப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுவிடுமோ என்ற அச்சமுள்ளது. ஆனால், விகிதாசார தேர்தல் முறையில் அதை பெறுவது சிரமம் என்பதுதான் இப்பொழுது ஒரே ஆறுதல்.

அண்மையில் மஹிந்த ராஜபக்ச,19வது திருத்தத்தை நீக்க வேண்டுமென்கிறார். அதைவிட ஆபத்து, 13வது திருத்தத்தையே அகற்ற வேண்டுமென விமல் வீரவன்ச தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் வடக்கிலிருந்தும் இந்த அணயினரிற்கு வாக்களித்தால், சிறுபான்மையினருக்கு பேராபத்து ஏற்படும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான நாடாளுமன்றம் செல்ல வேண்டுமா? நாம் போகிறோம் என மாற்று அணி தெரிவிக்கலாம். ஆனால், மாற்று அணியென குறிப்பிடப்படும் யாருக்கும் யாழ்ப்பாணத்திற்கு வெளியே பலமான அடித்தளம் இல்லை. பல கட்சிகளிற்கு கிழக்கில் அலுவலகமே இல்லை. அனைவரும் யாழ்ப்பாணத்திற்குள்தான் அரசியல் செய்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி எப்படி வாக்களிப்பது? உங்களிற்குள் ஏராளம் முரண்பாடுகள் உள்ளதே என யாராவது கேட்கலாம். உண்மைதான். சில முரண்பாடுகள் உள்ளன. ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் இலட்சியம், அதற்கான வழிமுறை, செயற்பாட்டில் யாருக்கும் முரண்பாடு இல்லை. இந்த விடயத்தில் இரா.சம்பந்தனிற்கோ, மாவை சேனாதிராசாவிற்கோ, த.சித்தார்த்தனிற்கோ, செல்வம் அடைக்கலநாதனிற்கோ முரண்பாடு இல்லை.

சில நபர்கள் பேசும் விடயத்தில் சில முரண்பாடுகள் உள்ளதுதான். அந்த அதிருப்தி எமக்குமுண்டு. என்னில் உங்களிற்கு அதிருப்தியிருந்தால் எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம். நான் தோற்கலாம். ஆனால் நாம் தோற்கக்கூடாது. உங்களிற்கு விமர்சனமுள்ளவர்களை தவிர்த்து விடலாம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்க கூடாது.

கடந்த 5 ஆண்டுகளில் 4000 ஏக்கரிற்கு மேற்பட்ட காணியை வலி வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுவித்தது. எஞ்சியுள்ள 2000 வரையான ஏக்கர் காணிகளை எப்படி விடுவிப்பது என்பதற்கான வேலைத்திட்டம் எம்மிடமுள்ளது. இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், கடந்த 5 வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என கேட்கிறார்கள்.

கிட்டத்தட்ட 700 அரசியல் கைதிகளில், இப்பொழுது 100 பேர் வரையானவர்களே சிறையிலுள்ளனர். ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர். எஞ்சியவர்களை எப்படி விடுவிப்பது? எப்படியான பொறிமுறை உள்ளது? என்ன செய்யப் போகிறோம என்பதை சொல்லித்தான் மாற்றுக்கட்சிகள் வாக்கு கேட்க வேண்டும். ஆனால் மாற்றுக்கட்சிகள் அதை செய்யாமல், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கிறது என்றுதான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 5 வருடங்களில், புதிய அரசியலமைப்பை அரசு உருவாக்குமென நாம் நம்பவில்லையென த.சித்தார்த்தன் பலமுறை சொல்லி வந்தார். அதுதான் இறுதியில் நடந்தது. ஆனால், அதற்காக அந்த முயற்சியில் நாம் ஈடுபடாமல் இருக்க முடியாது. தந்தை செல்வா காலத்தில் இருந்து இதைத்தான் செய்து வருகிறோம். விடாத முயற்சிதான் எம்மை வெற்றியடைய செய்யும்.

இந்த மாவட்டத்தில் ஜி.ஜி.பொன்னம்பலம், இராசூரியர், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலர் அமைச்சர்களாக இருந்தனர். ஆனால், அவர்கள் இந்த மண்ணிற்கு கொண்டு வந்த அபிவிருத்தி நிதியை விட, தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களில் கொண்டு வந்தது. மாவட்ட செயலகத்தில் அதற்கான புள்ளி விபரத்தை பார்வையிடலாம். 7000 மில்லியனிற்கும் அதிக நிதி செலவிடப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here