யாழில் வயோதிபப் பெண்ணின் வாயைக்கட்டி கொள்ளை… ஆசாமியின் வீட்டுக்கதவை தட்டியது மோப்பநாய்!

வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு புகுந்து வயோதிபப் பெண்களை தாக்கி நகை மற்றும் பணங்களை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடனே குறித்த கொள்ளையர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதான வீதி சித்தங்கேணிப் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் கொள்ளையர்கள் இருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் அங்கிருந்து வயோதிப பெண்கள் இருவரையும் மிரட்டியதுடன் ஒருவரை வீட்டு வளாகத்துக்குள் உள்ள கோவிலில் போய் அமருமாறு கூறியுள்ளனர். ஒருவர் அவ்வாறு ஆலயத்துக்குச் சென்றார்.

அதன் பின்னர் மற்றைய வயோதிபப் பெண் கூக்குரலிட்டதால் அவரது வாயை துணியால் கட்டிவிட்டு வீட்டை சல்லடை போட்டு தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுவிட்டு வேறு நகைகள் இருந்தால் தரும்படி வாயைக் கட்டிய வயோதிபப் பெண்ணைத் தாக்கி கொள்ளையர்கள்கள் கேட்டுள்ளனர்.

கொள்ளையர்களுக்குப் பயந்து போத்தல்களில் போட்டு வைத்த நகைகளையும் அந்தப் பெண் எடுத்துக் கொடுத்துள்ளார். கொள்ளையடித்த பொருட்களை கொண்டு அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நேற்று காலை சென்ற மேப்ப நாயுடன் சென்ற தடயவியல் பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதன் போது கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட வீட்டின் ஒரு பகுதியில் காணப்பட்ட மோப்பத்தை கொண்டு பொலிஸ் மோப்ப நாய் அங்கிருந்து கொள்ளையர்களை தேடி நகர தொடங்கியுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் இருந்து புறப்பட்ட மோப்ப நாய் அப்பகுதியில் உள்ள ஒருவருடைய வீட்டிற்குள் நேரடியாக சென்றுள்ளது. இதனடிப்படையில் குறித்த வீட்டில் இருந்து நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here