தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கு குறுக்கே நான் வரவில்லை: நவீன் விளக்கம்!

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுக்கு நான் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கொத்மலையில் இன்று மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமானது கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே நிர்ணயிக்கப்படுகின்றது. இது விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு கிடையாது. இதன்காரணமாகவே கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பணிகள் இடம்பெறவேண்டும் என கூறினேன். மாறாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கு நான் தடையாக இருக்கவில்லை. ஆயிரம் ரூபா கிடைத்திருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைப் பதவி கடந்தவாரம் தான் எனக்கு வழங்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ஒரு தொழிற்சங்க தலைவராக நான் போராடுவேன். தொழிலாளர்களுக்காக பேசவேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கின்றது.

இணைந்து பயணிப்போம் என்றே சஜித் தரப்புக்கு கூறப்பட்டது. ஆனால், தனித்து சென்றுவிட்டார்கள். ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என கூற முடியாது. ஏனெனில் 2015 இல் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் சஜித்தே பிரதித் தலைவர் பதவிக்கு தெரிவானார். அவர் பொறுமையாக இருந்திருந்தால் தலைமைப் பதவி கிடைத்திருக்கும்.

எது எப்படியோ எங்களுக்கு அரசாங்கத்துடன் டீல் கிடையாது. எங்களில் இருந்து பிரிந்து சென்றவர்களையும் இணைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைக்க நடவடிக்கை எடுப்போம். தொலைபேசிக்கு வாக்களித்து பயனில்லை. யானைக்கு வாக்களிக்கவும். ஐக்கிய தேசியக்கட்சி நிச்சயம் மீண்டெழும்.” என்றார்.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here