போலி புகைப்படத்தை நம்பி ரௌடியை தொலைபேசியில் காதலித்த பிரபல தமிழ் நடிகை: மோசடி கும்பலிடமிருந்து மயிரிழையில் தப்பித்தார்!


கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஊரே அடங்கி கிடக்க, இந்த காலகட்டத்தில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தையும், வாழ்க்கையையும் பறிகொடுக்க இருந்த நடிகை பூர்ணா கடைசி நேரத்தில் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசடி நபர்கள் மீது பூர்ணாவின் தாயார் போலீஸில் புகார் அளித்ததன் பேரில் சரத் அஷ்ரப், ரபீக், ரமேஷ் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில் இந்த மோசடி கும்பலிடம் பூர்ணா சிக்கியது எப்படி என்கிற பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன்ன.

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. கேரளாவில் வசிக்கும் இவர் ஷாம்னா காசிம் என்கிற பெயரில் மலையாளத்திலும் நடித்து வருகிறார். இவருக்கு மாப்பிள்ளை பார்த்து வரும் தகவல் அறிந்து இந்த மோசடி கும்பல் கடந்த ஏப்ரல் மாதமே பூர்ணாவின் குடும்பத்தை அணுகியுள்ளது. இந்த கும்பல் தங்களை நகைக்கடை உரிமையாளர்கள் போல் சித்தரித்துக்கொண்டு, டிக்டாக் மாடல் ஒருவரை மணமகனாக காட்டி சம்பந்தம் பேசியுள்ளதாக தெரிகிறது.

பூர்ணாவும் இதை உண்மை என நம்பி அந்த ஆணுடன் அடிக்கடி மொபைலில் பேசிவந்துள்ளாராம். பின்னர் பெண் பார்க்கும் வைபவத்திற்காக இந்த கும்பல் வந்தபோது, அவர்களுடன் மணமகன் வராதது பூர்ணாவின் குடும்பத்திற்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வந்த நபர்கள் பூர்ணாவின் வீட்டில் உள்ள கார், வீட்டில் வெளிப்புற தோற்றம் ஆகியவற்றை மொபைல் போனில் படம்பிடித்து சென்றதை சிசிடிவி காட்டிகள் மூலம் பார்த்த பூர்ணாவின் குடும்பத்தாருக்கு வந்து சென்றவர்கள் மீது சந்தேகம் வலுத்தது.. அதன்பின் டிக்டாக் மாடல் நபரிடம் இதுகுறித்து கேள்விகளை எழுப்ப அவர் ஒரு கட்டத்தில் பூர்ணாவுடன் தனது தொடர்பை துண்டித்துள்ளார்.

அதை தொடர்ந்து, இதுகுறித்து அந்த நபர்களிடம் பூர்ணா தரப்பில் விளக்கம் கேட்க, அப்போது இந்த மோசடி கும்பல் பூர்ணா குடும்பத்தாரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தரவில்லை என்றால் பூர்ணாவின் திரையுலக வாழக்கையையே நாசப்படுத்தி விடுவதாகவும் அவர்கள் எச்சரித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தான் பூர்ணாவின் தாயார் போலீஸில் புகார் செய்தாராம்.

போலீஸ் விசாரணையில் இந்த நால்வர் கும்பலுடன் இன்னும் குறைந்தபட்சம் மூன்று பேருக்காவது தொடர்பு இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. சினிமா, சின்னத்திரையில் உள்ள திருமணமாகாத இளம்பெண்கள் தான் இந்த மோசடி கும்பலின் டார்கெட்டாம். சினிமா வாய்ப்பு தருவதாகவோ, அல்லது திருமண சம்பந்தம் அமைத்து தருவதாகவோ, சம்பந்தப்பட்ட நடிகைகளின் குடும்பத்தாரிடம் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளும் இந்த நபர்கள், தங்களை நகைக்கடை உரிமையாளர்களாக அறிமுகப்படுத்தி கொள்வார்களாம். சில நாட்கள் பழக்கத்தின் பேரில் தொழிலில் முதலீடு செய்ய பணம் தேவைப்படுகிறது என நம்பவைத்து பணம் வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார்களாம்.

இன்னும் சில பெண்களிடம் சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக சொல்லி, அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவற்றை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்த பெண்களை மிரட்டி நகை கடத்தல் வேலைகளையும் இந்த கும்பல் அவ்வப்போது செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை பூர்ணா தவிர, இவர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் வேறு யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதன் பின்னணியில் வேறு யார் யார் செயல்படுகிறார்கள், இன்னும் வேறு ஏதேனும் சதித்திட்டம் இருக்கிறதா என்கிற கோணத்திலும் போலீஸார் வழக்கை விசாரித்து வருகின்றனராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here