தொலைபேசி திருட்டு… இரண்டு இளம்பெண்களிற்கு பிணை!

வீடொன்றில் கொள்ளையிட்ட தொலைபேசியினை வாங்கி பயன்படுத்தி வந்த குடும்பப்பெண்கள் இருவருக்கு தலா 1 இலட்சம் ரூபா சரீர பிணை வழங்கி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவு பகுதியில் 2020.02.20 திகதி அன்று வீடொன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் நகை கைத்தொலைபேசி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையடிக்கப்பட்டதாக முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான குழுவினர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் சந்தேக நபர்களினால் குறித்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளானது கடந்த மாதம் ஒலுவில் வயல்பகுதி ஒன்றில் சந்தேக நபர்களினால் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் ஊடாக உரிமையாளரிடம் பாரப்படுத்தப்பட்டது.

மேலும் களவாடப்பட்டிருந்த கையடக்க தொலைபேசியின் தரவுகளை உரிய முறையில் பெற்று முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த கைத்தொலைபேசியை பயன்படுத்தி வந்த அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் கைதானார். கைதான பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பிரகாரம் அவர் பயன்படுத்தி வந்த கைத்தொலைபேசி மீட்கப்பட்டது.

அத்துடன் பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசியை விற்பனை செய்ததாக மற்றுமொருவர் தற்போது வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளதாகவும் குறித்த நபர் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைதாகியுள்ளமை பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இது தவிர குறித்த தொலைபேசியை பயன்படுத்திய குடும்ப பெண் மற்றும் குறித்த தொலைபேசியை தற்போது சிறையிலுள்ள தனது கணவனிடம் இருந்து கொள்வனவு செய்ய உதவிய மற்றுமொரு குடும்ப பெண் உள்ளிட்ட சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (26) மாலை கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த இரு குடும்பப் பெண்கள் இருவருக்கு தலா 1 இலட்சம் ரூபா சரீர பிணை வழங்கி சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டார்.

இதில் கைத்தொலைபேசியை கொள்வனவு செய்ய உதவி ஒத்தாசை செய்து கைதாகிய குடும்ப பெண் தற்போது சிறையில் உள்ள தனது கணவனிற்கு உணவு பொதியில் போதைப்பொருளை மறைத்து கடத்தி சென்று வழங்கிய வழக்கில் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி தண்டப்பணம் விதிக்கப்பட்டவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here