ஆனையிறவு யுத்தத்தை நான் வழிநடத்தவில்லை… பிள்ளையான் ஒரு சிப்பாய்: கருணா அதிரடி!

ஆனையிறவு யுத்தத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. பானுதான் அந்த யுத்தத்தை வழிநடத்தினார் என தெரிவித்துள்ளார் கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன்.

தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே இதனை தெரிவித்தார்.

ஒஸ்லோவில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு திட்டத்தில் கையெழுத்திட்டதாலேயே பிரபாகரனிற்கு என் மீது கோபம் ஏற்பட்டது. மாத்தையாவும் இப்படித்தான் நடந்தார் என திட்டினார் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கருணா அம்மான் என அழைக்கும்போது எனக்கு விருப்பமாக உள்ளது. அதிகமான மக்கள் அப்படித்தான் அழைக்கிறார்கள்.

நாங்கள் போராடியபோது காட்டிக் குடுத்தவர்கள் அனைவரும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கிறார்கள். எனது விவகாரத்தில் பிரச்சனையை பெரிதாக்கியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். ஒரு தமிழனிற்கு பிரச்சனையென்றால், துணைக்கு வராமல் அவர்கள் பிரச்சனையை தூண்டி விட்டனர்.

ஆனையிறவு சண்டையை வழிநடத்தியது பானு. அவர்தான் கொடியேற்றினார். எனது பங்கு வேறு. ஆனால் நான் பழைய விடயங்களை பேச விரும்பவில்லை. ஆனையிறவு சமரில் நான் இருக்கவில்லை என வரும் விமர்சனங்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை.

ஒஸ்லோவில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு திட்டத்தை பாலா அண்ணையிடம் சொல்லி நானே கைச்சாத்திட வைத்தேன். இது நல்ல விடயம் பாலா அண்ணை கையெழுத்து வையுங்கள் என்றேன். அதுதான் எனக்கும், தலைவர் பிரபாகரனிற்குமான பிரச்சனை. அவர் சமஷ்டி தீர்வை விரும்பவில்லை. நாங்கள் இலங்கைக்கு திரும்ப முன்னரே அந்த விடயத்தை பிழையாக தலைவரிடம் மற்றவர்கள் சொல்லி விட்டனர்.

நான் ஒப்பந்தத்தை தலைவரிடம் கொண்டு சென்றபோது, அவர் அதை விரும்பவில்லை. அவர் கடுமையான நடந்து கொண்டார். உடனே தளபதிகள் கூட்டத்தை கூட்டினார். மாத்தையாவும் எனக்கு இப்படித்தான் செய்தார் என சொன்னார். நான் எழுந்து நின்று, “அண்ணை… இயக்கத்தை காட்டிக்கொடுக்க இந்த ஒப்பந்தத்தை செய்யவில்லை. இது இயக்கத்தை காட்டிக்கொடுக்க அல்ல, காப்பாற்றவே செய்தோம். நான் மட்டும் இந்த முடிவை எடுக்கவில்லை. குழுவிற்கு தலைமைதாங்கிய பாலா அண்ணையையும் அழைத்து ஒரு கூட்டத்தை நடத்துங்கள்“ என்றேன்.

பின்னர் நான் சொல்லாமல் கொள்ளாமல் நான் மட்டக்களப்பிற்கு சென்று விட்டேன். பின்னர் ஒரு மாதம் தொடர்பில்லாமல் இருந்தேன். அப்போது, எமது படையணியில் இருந்து 3000 போராளிகளை வன்னிக்கு அனுப்புமாறு தலைவர் கேட்டார்.

சமாதான பேச்சை நடத்துங்கள், யுத்தம் நடந்தால் நான் வருகிறேன் என்றேன். ஆனால், கட்டாயமாக அனுப்ப வேண்டுமென்றார். நான் மறுத்து விட்டேன். பின்னர், பிரச்சனை பெரிதாகியது.

நான் என்னுடன் இருந்த 6000 போராளிகளையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு, அலிசாகிர் மௌலானாவுடன் கொழும்பிற்கு சென்றேன். ஆனால், ரணில் என்னை பிரித்தெடுக்கவில்லை.

தலைவர் என்னை ஒருநாளும் துரோகியென கூறவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை நான் ஏற்கவில்லை. அவர்கள் குறுகிய வட்டத்தில் இருக்கிறார்கள். வடக்கிற்கு எதிரான பிரதேசவாதத்தை வளர்க்கிறார்கள். பிள்ளையான் என்பவர் யார்? நான் தளபதியாக இருந்தபோது, பிள்ளையான் யார் என்றே தெரியாது. எங்கோ பொருளாதார பிரிவில் இருந்தாராம். அவரையும் என்னையும் ஒப்பிட முடியாது.

மட்டக்களப்பில் மட்டுமே தமிழ் மக்கள் விடுதலை புலிகள் போட்டியிடுகிறார்கள். அவர்களின் அளவு அவ்வளவுதான்.

இராசதுரையை மூளை குழம்பிய சிவாஜிலிங்கம் அடித்து கலைத்தார். அவருக்கு பைத்தியம். ஒரு பைத்தியம் செய்த காரியத்திற்காக, வடக்கு மக்களை வெறுக்கலாமா? என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here