வரலாற்றில் முதல் தடவையாக முழங்காவிலுக்கு விசேட பொது வைத்திய நிபுணர் நியமனம்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்கு முதற் தடவையாக விசேட பொது வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்

கிளிநொச்சியிலிருந்து மேற்காக மன்னார் மாவட்ட எல்லைக்கு அண்மித்து அமைந்துள்ள முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்கு முதன்முதலாக விசேட பொது வைத்திய நிபுணர் ஒருவர் (VP) மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பட்டதாரியான மருத்துவ கலாநிதி பிரசாத்தே இவ்வாறு முழங்காவில் வைத்தியசாலைக்கான விசேட பொதுமருத்துவ நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் மற்றும் வைத்தியர் சங்க வடமாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி காண்டீபன் ஆகியோரது கூட்டுமுயற்சி மற்றும் குறித்த வைத்திய நிபுணரது சுயவிருப்பு ஆகியவற்றினாலேயே இந்த நியமனம் சாத்தியமானதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்பேசும் வைத்தியர்கள் தமிழ் பிரதேசங்களை நாடுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தற்போது பல விசேட வைத்திய நிபுணர்கள் வடக்கு கிழக்கின் மிகப் பின்தங்கிய பகுதிகளில் பணியாற்ற தாமாக முன்வருவது குறித்துப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மன்னார் யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையில் மன்னாருக்கும் சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட பாரிய பிரதேசத்திற்கான ஒரே ஒரு ஆதார வைத்தியசாலையான முழங்காவில் இவரது வருகையுடன் புத்தெழுச்சி அடையும் என வைத்தியசாலை சமூகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் எல்லைக்கிராமங்கள் தொடக்கம் கிளிநொச்சியின் மிகப் பின்தங்கிய பிரதேசங்களான வலைப்பாடு, வேரவில், கிராஞ்சி, பல்லவராயன்கட்டு, ஜெயபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதுவரை தமது மேலதிக மற்றும் விசேட பொது மருத்துவ ஆலோசனைகளுக்காக 64 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிளிநொச்சி மற்றும் 57 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சாவகச்சேரி மருத்துவமனைகளையே நம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here