கருணாவின் கருத்து மிலேச்சத்தனமானது!

கருணா அம்மான் வெளியிட்ட கருத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொத்மலை நவதிஸ்பனை பகுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவராக செயற்பட்டவரே கருணா. அப்போது அவர் எமது இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளை கொன்றிருக்கலாம். பிரபாகரனிடமிருந்த சிறந்த இராணுவ தலைவரே அவர். எனினும் தீர்க்கமான கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்த புலிகளின் தலைமையகத்தை தீயிட்டுக் கொளுத்திவிட்டு, எமது இராணுவத்துடன் இணைந்து கொண்டார். இதனால் கிழக்கு மாகாணத்தை விரைந்து கைப்பற்றக் கூடியதாக இருந்தது. தொப்பிகல போன்ற தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். அதன் பின்னரே அரசாங்கத்துடன் இணைந்தார்.

சட்டத்தின் முன், அரச சாட்சியாக மாறி இழைத்த தவறிலிருந்து விடுபடுவதற்கு எந்தவொரு நபருக்கும் முடியும். கருணா அம்மான் இழைத்த தவறுகளில் இருந்து அவரை விடுபட வைக்க நான் முயற்சிக்கவில்லை. ஆனால், தீர்க்கமான கட்டத்தில், தீர்க்கமான ஒத்துழைப்பை வழங்கியவர்தான் அவர்.

கருணா அம்மானின் கருத்தானது மிலேச்சத்தனமானது. அப்படியொரு கருத்தை அவர் வெளியிட்டிருக்கக்கூடாது. அந்த கருத்தை அனுமதிக்கமாட்டோம். இதற்காக கருணா கவலையடைய வேண்டும். வேதனை அனுபவிக்க வேண்டும். அவரின் கூற்றை கண்டிக்கின்றேன். கடும் அதிருப்தியையும் வெளியிடுகின்றேன்.”

அதேவேளை, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்ட கருத்தையும் கண்டிக்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அவர் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here