யாழில் சுகாதார பரிசோதகரை தாக்கிய ஐஸ்கிறீம் கடை முதலாளியின் மகனிற்கு விளக்கமறியல்!

யாழ் நகருக்கு அண்மையில் குப்பை கொட்டியதுமல்லாமல், குப்பை கொட்டியதற்காக வழக்கு பதிவு செய்ய முற்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகரையும் தாக்கிய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ நகர், ஸ்ரான்லி வீதி அத்தியடிச்சந்தியில் குப்பை அதிகளவில் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் பல சுகாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அந்த இடத்தில் குப்பை கொட்ட வேண்டாமென யாழ் மாநகரசபையினால் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது. எனினும், அதையும் பொருட்படுத்தாமல் விசமத்தனமாக பலர் அந்த இடத்தில் குப்பை கொட்டி வருகின்றனர். இந்த விசமிகளை மடக்கிப்பிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையில், அந்த பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 70இற்கும் மேற்பட்டவர்களிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சில தினங்களின் முன்னர் 6332 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்தவர் குப்பை கொட்டினார். பொதுச்சுகாதார பரிசோதகர் அதனை அவதானித்து, அவர் மீது வழக்கு தொடர முற்பட்டபோது, அவரை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த சுகாதார பரிசோதகர் யாழ் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சுகாதார பரிசோதகரை தாக்கியவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவரை நாளை-26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ் நகரிலுள்ள ஐஸ்கிறீம் விற்பனை நிலைய உரிமையாளரின் மகனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here