வலி.வடக்கு பிரதேசசபை கடை குத்தகையில் என்ன நடந்தது?

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் தவிசாளர், பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தை வீட்டிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார், அவரது மனைவி பாடசாலைக்கு அந்த வாகனத்திலேயே சென்று வருகிறார் என்ற தகவலை தமிழ்பக்கம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக மேலும் சில விடயங்களை இப்பொழுது வெளியிடுகிறோம்.

கடந்த நிர்வாகத்திலும், இந்த நிர்வாகத்திலும் பிரதேசசபைக்குட்பட்ட வீதி அபிவிருத்தி ஒப்பந்த வேலைகள் எல்லாமே ஒரேயொரு நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. யுபிட்டல் கென்ராக்ரர்ஸ் என்ற நிறுவனத்திற்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்குவதற்கு எதிராக தொழில்நுட்பகுழு உறுப்பினர்கள் பலமுறை ஆட்சேபணை வெளியிட்டிருந்தனர். பிரதேசத்தில் உள்ள ஏனைய ஒப்பந்தக்காரர்களிற்கும் சுழற்சிமுறையில் வாய்ப்பளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இது நடைமுறைப்படுத்தப்படாமலேயே உள்ளது.

பிரதேசசபையின் ஒப்பந்தங்களில் 2 மில்லியன் ரூபாவிற்கு குறைவான ஒப்பந்தங்கள் சனசமூக நிலையங்கள்  உள்ளிட்ட பொதுஅமைப்புக்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம். சனசமூக நிலையங்களின் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது..

எனினும், வலி வடக்கில் இப்படியான ஒப்பந்தங்கள் அனைத்தும் மேலே குறிப்பிட்ட ஒரே நிறுவனத்திடமே வழங்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் மூலமே பணிகளை மேற்கொள்ளும்படி பிரதேசசபை சிபாரிசு செய்வதாக, வலிவடக்கிலுள்ள சில சனசமூக நிலைய பிரதிநிதிகள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட ஒரே ஒப்பந்தக்காரரிடமே தொடர்ந்து ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதன் பின்னணியில் எதேனும் விசேட காரணங்கள் உள்ளனவா என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கீரிமலையில் பிரதேசசபையினால் ஐந்து கடைகள் புதிதாக கட்டப்பட்டிருந்தன. இதில் 5வது கடையும் புதிய சிக்கலை கிளப்பியுள்ளது. பிரதேசசபை காரணமின்றி தனது கேள்விமனுவை நிராகரித்து, தன்னிலும் குறைந்த பணத்தில் கேள்விகோரல் மேற்கொண்டவரிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக, மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த கடைக்கான கேள்வி கோரப்பட்டபோது, மூவர் விண்ணப்பித்திருந்தனர். ஒருவர் 10 இலட்சம் ரூபா, இன்னொருவர் 9 இலட்சம் ரூபா, அடுத்தவர் 6 இலட்சம் ரூபா மனுசமர்ப்பித்திருந்தனர். முதலாமவர் குறிப்பிட்ட காலத்தில் பணத்தை செலுத்த முடியவில்லை. அதனால் அவர் நிராகரிக்கப்பட்டார். அடுத்தவர் வெளிநாட்டில் இருப்பவர். அதனால் அவரும் நிராகரிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இரண்டாம் முறையாக கேள்விகோரப்பட்டது. அப்போது 6 இலட்சத்திற்கும் குறைந்த கேள்விகோரலை மேற்கொண்ட ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவரே தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here