திருகோணமலை நகர் பிரதேசத்தில் சகல நடைபாதை வியாபாரங்களையும் நீறுத்த தீர்மானம்

திருகோணமலை நகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள சகல நடைபாதை வியாபார செயற்பாடுகளையும் எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி முதல் நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஆரம்ப காலம் முதல் நடைபாதை வியாபாரம் மற்றும் பருவகால வியாபார செயற்பாடுகளை மேற்கொண்டவர்களின் வியாபார நடவடிக்கைகள் ஏதோ ஓர் முறைப்படுத்தப்பட்ட முறையில் செய்வதற்கான ஒழுங்குமுறைகள் எடுக்கப்படல் இன்றியமையாதது என்றும் உரிய நிறுவனங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இதன்போது அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக கொவிட்19 காலப்பகுதியில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் பொது சந்தையின் செயற்பாடுகளை பரவலாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் பலர் பாதையோரங்களான நடைபாதைகளிலும் வியாபார செயற்பாடுகளை மேற்கொண்டனர். இதனால் மக்கள் பொருட்களை இலகுவாக கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாடு இயல்புநிலைக்கு திரும்பியமையால் தற்காலிகமாக செயற்பட அனுமதிக்கப்பட்ட நடைபாதை வியாபார செயற்பாடுகளும் எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை நகரசபை தவிசாளர் நா.இராசநாயகம், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் ஜி.ஞானகுணாளன், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here