சம்பந்தன் சொன்ன ஒரு பதிலால் கேள்விக்குள்ளான தலைமைத்துவ தகுதி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனால் விமர்சிக்கத்தான் முடியும் அவரால் வேறு என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

அவருடைய கேள்விக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அண்மையில் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தான்தான் விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டு வந்ததாகவும், அவரால் கூட்டமைப்பை விமர்சிக்கத்தான் முடியும், மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அத்துடன் தான் யாரையும் விலக்கவில்லை என்றும், ஏன் அவர்களை விலகினார்கள் என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவருக்கு தனது கூட்டமைப்பில் இருந்து பல கட்சிகளும் பல தனி நபர்களும் ஏன் விலகி போகிறார்கள் என்பது தெரியவில்லை என்றால் அவர் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்க எவ்வளவு தகுதி உள்ளவர் எனக் கேட்கத் தோன்றுகின்றது.

கூட்டமைப்பிற்குள் இருக்கக் கூடிய ஜனநாயகம் அற்ற தன்மை, கூட்டமைப்பை பதிவு செய்ய மறுத்தமை, பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட பொழுதும் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளை தீர்க்கத் தவறியதுடன், தமக்குக் கிடைத்த சலுகைகளுடன் திருப்திப்பட்டுக் கொண்டமை, புதிய அரசியல் சாசன வரைவில் வட,கிழக்கு இணைப்பையோ, வட,கிழக்கில் மத சார்பற்ற தன்மையையோ, சமஷ்டி அரசியலமைப்பு முறையையோ வலியுறுத்தத் தவறியமை, இப்படியே பல காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம். இது எதுவும் சம்பந்தனுக்குத் தெரியாதா? தெரியாது என்று அவர் கூறுவாராயின், 87 வயதிற்கேற்ற மறதியாகத்தான் இருக்க முடியுமே தவிர வேறல்ல.

முன்னாள் முதல்வரை அரசியலுக்கு கொண்டு வந்தவர் சம்பந்தன் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அவரை ஏன் அரசியலுக்கு கொண்டு வந்தார்? அவரை பொம்மை போல் வைத்திருக்கவா? அல்லது அவரது திறமைகளை பாவித்து தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காகவா?

முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களை அரசியலுக்கு கொண்டு வர கொழும்பில் மூன்று நாட்கள் பங்காளிக் கட்சிகளுடன் கூட்டம் நடைபெற்றது. மாவை சேனாதிராசா தான் முதல்வராக வர விரும்பினார். முதலமைச்சர் அரசியல் ரீதியாக அனுபவமில்லாதவர். அவரை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்று பல தரப்பும் கேள்விகளை கேட்டு நீண்ட விவாதங்களே நடைபெற்றது. இறுதியில் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளை வலியுறுத்த உயர் நீதிமன்ற நீதியரசர் என்ற வகையில் இவர் அதற்கான சர்வதேசப் பிரசாரங்களை மேற்கொள்ள முடியும் என்று எமக்கு கூறப்பட்டது.

ஆனால் அந்த நோக்கங்களை நிறைவேற்ற அவரை எந்த சந்தர்பத்திலும் பயன்படுத்தியது கிடையாது. மாறாக இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்ற தீர்மானத்தை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்ற விக்னேஸ்வரன் முயற்சித்த பொழுது, அதனை செய்ய வேண்டாம் என்றும், அதனை நிறுத்தும் படியும், சம்பந்தனும் சுமந்திரனும் வலியுறுத்தினார்கள்.

ஆனால் அவர்களது கருத்துக்களை மீறி இலங்கையில் தமிழனப்படுகொலை நடைபெற்றது என்ற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்டது.
இன்று கூட்டமைப்பை விமர்சிப்பதைத் தவிர விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியுமென சம்பந்தர் கேட்கின்றார்.

நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில், அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு நல்லுறவை வைத்திருந்த காலத்தல் தமிழ் மக்களுக்காக நீங்கள் சாதித்தவை என்ன என்பதை தயவு செய்து வெளிப்படுத்துங்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக, அரசியல் கைதிகள் தொடர்பாக, காணிகள் தொடர்பாக என்ன காத்திரமான நகர்வுகள் உங்களால் மேற்கொள்ளப்பட்டன. புதிய அரசியல் சாசனம் 2016 இல் வருகிறது, 2017 இல் வருகிறது, 2018 இல் வருகிறது என்றீர்கள். எங்கே போனது அரசியல் சாசனம்.

இவற்றை விடுங்கள் ஐயா! திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்று கிணறுகளையாவது பாதுகாக்க முடிந்ததா? விக்னேஸ்வரனால் என்ன செய்ய முடியுமென கேட்கக் கூடிய யோக்கியதை உங்களுக்கு இருக்கிறதா என கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here