ஜோகோவிச், மனைவிக்கும் கொரோனா!

பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் வன் இடத்தில் இருப்பவர் நோவக் ஜோகோவிக் (33).

இந்நிலையில், குரோசியா மற்றும் செர்பியா நாடுகளில் வாராந்திர டென்னிஸ் போட்டிகளை தலைமையேற்று இவர் நடத்தியுள்ளார். இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் டென்னிஸ் வீரர்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், ஜோகோவிக்கிற்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், செர்பியாவின் பெல்கிரேட் நகருக்கு வந்தவுடன் எங்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் எனக்கும், எனது மனைவி ஜெலினாவுக்கும் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. எங்களுடைய குழந்தைகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

இதனால் தொடர்ந்து 14 நாட்களுக்கு நான் சுய தனிமைப்படுத்துதலில் இருப்பேன். அடுத்த 5 நாட்களில் மீண்டும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்வேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று இவர் நடத்திய போட்டிகளில் விளையாடிய குரோசியா நாட்டின் போர்னா காரிக், பல்கேரியா நாட்டின் கிரிகோர் டிமிட்ரோவ் மற்றும் விக்டர் டிராய்க்கி ஆகியோருக்கு முன்பே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில், பல நாட்டு வீரர்களை அழைத்து போட்டிகளை நடத்தியதற்காக ஜோகோவிக்கிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here