வடக்கில் முதலாவது வில்லங்க சம்பவம்: வைத்தியசாலைக்கு இராணுவப் பாதுகாப்பு கோரிய வைத்திய அதிகாரி!

நாட்டிலுள்ள கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாகத் தன்னிச்சையாக மாற்ற எத்தனிக்கும் கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்கு இராணுவத்தின் பாதுகாப்பைக் கோரி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் கிளிநொச்சி படைகளின் தளபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

19-06-2020 திகதியிடப்பட்டு கிளிநொச்சி படைகளின் தளபதிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் ‘அக்கராயன் பிரதேச வைத்தியசாலையின் பாதுகாப்புக்கு இராணுவத்தினர் தேவை’ என கோரப்பட்டுள்ளது.

‘கோரானா வைத்தியசாலையாக மாற்ற எத்தனிக்கப்படும் அக்கராயன் வைத்திசாலையிலிருந்து கொரோனா நோயாளர்கள் வெளியேறுவதனை தடுப்பதற்கும், மற்றும் பிரதேச மக்களிடமிருந்து வைத்தியசாலைக்கு ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்குமாக’ இராணுவத்தினரது பாதுகாப்புக் கோரப்பட்டுள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதார துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அக்கராயன் மருத்துவமனையானது கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதும் கிளிநொச்சி வைத்தியசாலைப் பணிப்பாளரது ஆளுகை அவரது வைத்தியசாலை எல்லைக்குள் மட்டுமே என்பதையும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.இருந்தும் மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக வைத்தியதுறை அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

‘அக்கராயன் மருத்துவமனையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றாது பொருத்தமான வைத்தியசாலை ஒன்றை தெரிவு செய்யுமாறும், அக்கராயன் வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்ற மருத்துவ சேவையினை நிறுத்த வேண்டாம்’ எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் பிரதேச மக்கள், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நம்பியிருக்கின்ற முழுமையான பயன்பாட்டில் உள்ள வைத்தியசாலையினை அவ்வாறே இயங்க விடுமாறும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் அண்மையில் அக்கராயன் மருத்துவமனையில் இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின்போது, ‘இங்குள்ள யாரோ ஒரு அதிகாரிதான் அக்கராயன் வைத்தியசாலையைப் பரிந்துரைத்திருக்க வேண்டும்” என நேரடியாக அங்கிருந்த சுகாதார திணைக்கள அதிகாரிகளின் முகத்திற்கு நேரே மக்கள் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியிருந்தமையை சுட்டிக்காட்டத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here