முல்லைத்தீவில் வேகமாக நகரும் எல்லைகள்: தமிழர்களின் விவசாய நிலங்களில் சிங்களவர்களின் பங்களாக்கள், தோட்டச் செய்கை!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் நிலங்களில் பெருமெடுப்பில் தோட்டச் செய்கையில் ஈடுபடும் சிங்களவர்களின் அத்தமீறல், தற்போது எஞ்சியுள்ள தமிழ்க் கிராமங்களையும் வந்து தொட்டுள்ளது.

தமிழர்களின் பூர்வீக தோட்டச்செய்கை நிலமான, தொட்டகண்டல் குளம் பகுதியில் உள்ள 825 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு, சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

தற்போது அந்த காணிகளில் பெரிய பங்களா ஒன்று சிங்கள மக்களால் நிறுவப்பட்டுள்ளதுடன், பெருமெடுப்பில் தோட்டச் செய்கைகளும் நடைபெற்று வருகிறது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில், கோட்டைக்கேணி தொடக்கம் அம்பட்டன் வாய்க்கால், தொட்டகண்டல் குளம் ஆகிய பகுதிகளில் ஒரு பகுதியாக வனஜீவராசிகள் திணைக்களமும், மறுபகுதியில் வனவளத் திணைக்களமும் காணிகளை அபகரித்துள்ளது.

இந் நிலையில் நிமால் சிறீபாலடிசில்வா அமைச்சராக இருந்த காலத்தில் தொட்டகண்டல் குளம் பகுதியிலுள்ள 825 ஏக்கர் காணிகள், 33 சிங்கள பயனாளிகளுக்கு, ஒருவருக்கு தலா 25ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

நிமால் சிறீபாலடிசில்வாவின் நெருங்கிய சகாக்களுக்கு இவ்வாறு காணி பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாக சிங்களப் பத்திரிக்கை ஒன்றும் செய்தி வெளியிட்டிந்தது.

அதேவேளை இவ்வாறு சிங்களப் பயனாளிகளுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட குறித்த தொட்டகண்டல் குளம் என்னும் இடத்தில் தற்போது பாரிய பங்களா ஒன்று கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றது. அத்தோடு காணியைச் சுற்றிலும் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டு, அக்காணிகளுக்குள் தென்னைகள், மற்றும் வாழை, மா உள்ளடங்கலாக அவர்கள் தோட்டச் செய்கையில் ஈடுபடுவதனை தற்போது காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்தக் காணிகள் 80 தமிழ் பயனாளிகளிகளுக்கே ஆரம்பத்தில் வழங்கப்பட்டிருந்தன. 1956ஆம் ஆண்டு தொடக்கம், 1984ஆம் ஆண்டு வரையில் எங்களுடைய தமிழ் மக்கள் குறித்த காணிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் பிற்பாடு 1984ஆம் ஆண்டு அப்பகுதியிலிருந்து எமது தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டு இக்காணிகள் யாவற்றினையும் அபகரித்துள்ளனர்.

தற்போது அக் காணிகள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் அவர்களால் அங்கு தோட்டச் செய்கை இடம்பெறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here