பொத்துவில் முகுது மஹா விகாரை காணி அளவீட்டிற்கு தேர்தல் முடியும் வரை தடை!

பொத்துவில் முகுது மஹா விகாரைக்குரியதென பௌத்த பிக்குகளால் உரிமை கோரப்படும் நிலத்தின் அளவீட்டு பணிகளை, நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரை இடைநிறுத்தி வைக்கும்படி பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.மொஹமட் றாபி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு நேற்று (22) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரமும், தொல்லியல் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின்படியும் 30 ஏக்கர் நிலத்தை மாத்திரமே அளவீடு செய்ய அதிகாரமுள்ளதெனவும் சுட்டிக்காட்டிய பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, அந்த அளவீடு முடிந்ததும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றும், அந்த 30 ஏக்கர் காணிக்குள் பாதிக்கப்பட்ட 13 குடியிருப்பாளர்களின் காணிகள் இல்லையென உறுதிசெய்ய்பட்டால், அவர்கள் தமது காணிகளில் கட்டடம் அமைக்க அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை,30 ஏக்கர் காணிக்குள் குடியிருப்பாளர்களிற்கு ஜயபூமி காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதால், சட்டபூர்வமாக அவர்கள் அங்கு குடியிருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

தொல்லியல் திணைக்களத்தினர், பொலிசார் தேர்தல் முடியும் வரை அந்த காணிகளிற்கு சென்று தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதை, நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை தடைசெய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக, மன்றில் முன்னிலையாகியிருந்த அம்பாறை தொல்பொருள் திணைக்கள உதவி பணிப்பாளர், 30 ஏக்கர் காணி அளவீடு முடிந்துள்ளதாகவும், வரைபடங்கள் வரைய கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இறுதி அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, விகாரைக்குரிய 30 ஏக்கர் காணிக்குள் 13 குடியிருப்பாளர்களின் காணிகளும் உள்ளதா என்பதை உறுதி செய்ய பின்னர், அவர்களை வெளியேற்றுவதா அல்லது கட்டடம் கட்ட அனுமதிப்பதா என்பதை தீர்மானிக்கலாமென்றும், நாடாளுமன்ற தேர்தல் வரை அபபகுதிக்கு சென்று தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வேண்டாமென்றும் சம்பந்தப்பட்ட துறைகளிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here