பிளவுபட்ட உலகத்தால் கொரோனாவை எதிர்கொள்ள முடியாது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

பிளவுபட்ட உலகத்துடன் நாம் இந்தத் தொற்றுநோயைத் தோற்கடிக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியாயேசஸ் இன்று (திங்கட்கிழமை) கூறும்போது, ”உலகம் தற்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய அச்சுறுத்தல் வைரஸ் அல்ல. ஒற்றுமையின்மை மற்றும் உலக அளவில் நிலவும் தலைமைப் பற்றாக்குறையே தற்போது நிலவும் அச்சுறுத்தல். பிளவுபட்ட உலகத்துடன் இந்தத் தொற்றுநோயைத் தோற்கடிக்க முடியாது.

தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. இந்தத் தொற்றுநோய் உடல் குறைபாட்டைவிட பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தப் பாதிப்பு தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்றும், ஊரடங்குத் தளர்வுகளை உலக நாடுகள் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட முடியாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

பொதுவெளிகளில் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மட்டுமே தற்போது வரை கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here